படத்தின் ஆறு நிமிடம் ஓடக்கூடிய காட்சியை ஒரே 'டேக்'கில் எந்த ஒரு பிசிறலும் இன்றி நடித்துக் காட்டினார் நடிகர் சிம்பு.
இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்த நடிகை கல்யாணி பிரிய தர்ஷன், "இதுபோல் வேறு யாராலும் முடியாது, உங்கள் திறமை அபூர்வமானது," என்று மனம்திறந்து பாராட்டி உள்ளார்.
சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது 'மாநாடு' திரைப்படம். சிலம்பரசனும் கல்யாணி பிரியதர்ஷனும் நாயகி, நாயகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசியல் பின்னணியுடன் உரு வாகி வரும் இப்படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிலம் பரசன் நடித்து வருகிறார்.
நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியைப் படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் கொண்ட காட்சியை ஒரே 'டேக்' கில் நடித்து அசத்தினார் சிம்பு.
அவர் ஒரு 'சிங்கிள் டேக்' நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஆறு நிமிட காட்சியைக் கூட அவர் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததைக் கண்டு, அங்கிருந்த படப்பிடிப்புக் குழுவினர் கைதட்டி பாராட்டினர்.
ரம்ஜான் பண்டிகையின்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.

