விஜய்யின் நாயகி பூஜா ஹெக்டே கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், விஜய் நடிப்பில் ஜார்ஜியாவில் நடந்து வந்த 'தளபதி 65' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்து சென்னைக்குத் திரும்பி உள்ளனர் திரைப்படக் குழுவினர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காெணாளி கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் ஜீவாவின் 'முகமூடி' திரைப்படத்தில் தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய பூஜா ஹெக்டே, தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 18 நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் விஜய்-பூஜாவின் காதல், பாடல் காட்சிகளுடன் ஒரு சில அதிரடி சண்டைக் காட்சிகளையும் அங்கு படமாக்கினார் இயக்குநர் நெல்சன்.
இதன்பின்னர், படக்குழுவினர் சென்னை திரும்பிய நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதுகுறித்து பூஜா தனது டுவிட்டர் பதிவில், ''எனக்கு கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன்.
"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
"உங்கள் அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி. நான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன். தயவுசெய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பூஜாவின் இந்தச் செய்தியைக் கேட்டு படக்குழுவினர் அதிர்ந்துள்ளனர்.
இந்திய மாடல் அழகியும் பாலிவுட் நடிகை யுமான பூஜா ஹெக்டே, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தாய்மொழியான துலுவுடன், இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழியையும் சரளமாகப் பேசுபவர்.
பூஜாவுக்கு நடனமாடுவதும் ஆடை அலங்கார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அலாதி பிரியமாம்.
வர்த்தகத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள பூஜாவுக்கு 'பாகுபலி' புகழ் பிரபாசுடன் தனிப்பட்ட முறையில் ஒரு பாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பூஜாவோ, பிரபாசோ இதுகுறித்து எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
பீட்சாவும் பிரியாணியும் நான் சுவைக்க விரும்பும் உணவுகள் என்று கூறும் பூஜாவுக்கு பாடுவது, பயணம் செய்வது, நடனமாடுவது, புத்தகம் வாசிப்பது முக்கிய பொழுதுபோக்காக ஆகி உள்ளதாகவும் கூறுகிறார்.
இதற்கிடையே, விவேக் மறைவின்போது விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதேசமயம் விஜய் ஓர் இரங்கலாவது தெரிவித்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு தனது நண்பர் விவேக் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் விஜய்.
நடிகர் விவேக் விஜய்யுடன் சேர்ந்து 'ஷாஜகான்', 'உதயா', 'யூத்', 'பத்ரி', 'பிரியமானவளே', 'குஷி', 'குருவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே, 'அடங்கமறு', 'அயோக்யா' படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷி கண்ணா, தற்போது தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக 'தேங்க்யூ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் உள்ள மிலன், டூரின் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
"இங்கே கிரு மிப்பரவல் அவ்வளவாக இல்லை. மக்கள் வழக்கம்போல சர்வசாதாரணமாக நடமாடிக்கொண்டு உள்ளனர். நாங்கள் தக்க பாதுகாப்பு முறையுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்," என ராஷி கண்ணா கூறியுள்ளார்.

