புதுத்தோற்றத்துடன் 'சர்தார்' கார்த்தி
'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு 'சர்தார்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கார்த்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளி யிடப்பட்டுள்ளது.
தற்போது மணி ரத்னத்தின் 'பொன்னி யின் செல்வன்' திரைப்படத்தில் நீண்ட முடி, தாடி என தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டிவரும் கார்த்தி 'சர்தார்' படத்தின் மோஷன் போஸ்டரிலும் நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் மிரட்டுகிறார்.
கார்த்தியின் 22வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
நிதியுதவியைத் தொடங்கிய அனுபமா
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தமுறை கொரோனா பரவலின் போது, ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கோடிக்கணக்கில் வழங்கிய நிதியுதவியால் படப்பிடிப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்ட திரையுலகத் தொழிலாளர்கள் பலரும் பெரிதும் பயனடைந்தனர்.
இந்நிலையில், தமிழ், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், கேரள அரசுக்கு நிதி வழங்கியது குறித்த ஆதாரத்தைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். "எனது கடமையைச் செய்துவிட்டேன், நீங்களும் உங்களால் முடிந்ததைக் கொடுத்துதவுங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

