'வலிமை' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியின் வெளியீடு தள்ளிப் போனது அஜித் ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. எனினும் அதைப் போக்கும் வகையில் அப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா காலகட்டத்தில் படத்தயாரிப்புப் பணிகளில் எந்தவித தொய்வும் தாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம் அஜித். இதை மனதிற் கொண்டு தமது வசனங்களுக்கான பின்னணிக் குரல் பதிவை (டப்பிங்) நான்கே நாட்களில் அவர் முடித்துள்ளார்.
நேர்மையான காவல்துறை அதிகாரியான அர்ஜுனின் வாழ்க்கையில் தேவையின்றி குறுக்கிடுகிறார் வில்லன் கார்த்திகேயா (தெலுங்கில் முன்னணி நாயகன்). சமூகத்துக்குத் தீங்கிழைக்கும் அந்த வில்லனை சட்டத்தின் முன் நிறுத்துகிறார் கதாநாயகன்.
இதையடுத்து நிகழும் சம்பவங்கள்தான் 'வலிமை'யின் கதை. ஏற்கெனவே கேள்விப்பட்ட, பலமுறை திரையில் பார்த்த கதைக்களமாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களைக் கவரும் வகையில் 'வலிமை' உருவாகிறது.
அஜித் படங்களுக்கே உரிய குடும்ப உணர்வுகள், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக்காட்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் வினோத் விறுவிறுப்பு குறையாமல் அமைத்திருப்பதாகத் தகவல். 'காலா' படத்தின் பட நாயகி ஹூமா குரேஷிதான் இதில் அஜித்துக்கு ஜோடி. நாயகனின் தாயாக சுமித்ராவும் நண்பர்களாக யோகிபாபு, புகழும் நடித்துள்ளனர்.
பஞ்சாபி நடிகை குர்பானி ஜட்ஜ் இப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்குள் நுழைகிறார். மலையாள நடிகர் சிவாஜி குருவாயூருக்கும் முக்கிய வேடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். ஹைதராபாத்தில் மூன்றும் சென்னையில் இரண்டுமாக மொத்தம் ஐந்து சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த சண்டைக் காட்சியை சென்னயிலேயே அரங்கு அமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். அனைத்துமே சிறப்பாக இருப்பதாக பாராட்டி உள்ளாராம் அஜித்.
ஹைதராபாத்தில் இருந்தபோது தினந்தோறும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு மிதிவண்டியிலேயே வந்து சென்றுள்ளார் அஜித். பாதுகாப்பு கருதி அவரது உதவியாளர்கள் காரில் பின் தொடர்ந்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர். ஆகஸ்ட் மாதம் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வருகிறது. எனவே, அன்றைய தினம் படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்புத் தரப்பில் விரும்புகிறார்கள்.
அதே ஆகஸ்ட் மாதம் தமது நடிப்பில் ஒரு படம் வெளியானால் அது வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அஜித்துக்கும் இருக்கிறதாம். எனவே, 'வலிமை' படம் அம்மாதம்தான் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணிக் குரல் பதிவின்போதே முழு படத்தையும் பார்த்துவிட்டார் அஜித். படம் நேர்த்தியாக உருவாகி இருப்பதாக பாராட்டியதாகத் தகவல்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில் திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளை நிரப்பலாம் என்ற அறிவிப்பு வெளியாகும்போது படத்தை வெளியிட்டால் போதும் என்பதுதான் அஜித்தின் முடிவு. இதை அவர் ஏற்கெனவே தயாரிப்புத் தரப்பிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டாராம்.
எனவே, அந்த நாளுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

