திரிஷா: பெயரை மாற்றவில்லை
நடிகை திரிஷா தன் பெயரை திடீரென மாற்றிவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.
17 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்துவரும் திரிஷா தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் அண்மையில் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்டது.
அப்படத்தின் தலைப்பில் அவரது பெயரை 'த்ர்ஷா' என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் பெயர் ராசி கருதி அவர் தன் பெயரை மாற்றிக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தாம் பெயர் மாற்றம் செய்யவில்லை என திரிஷா தெளிவுபடுத்தி உள்ளார்.
"திரிஷா என்ற அழகான பெயர் இருக்கும்போது எதற்காக அதை மாற்றவேண்டும். இதுபோன்ற வதந்திகளை எனது ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்," என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை-2', 'ராங்கி', 'சுகர்', '1818' ஆகிய படங்களில் நடிக்கிறார் திரிஷா.
மீண்டும் நடிக்க வந்த சுவாதி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் 'சுப்ரமணியபுரம்' நாயகி சுவாதி.
தெலுங்கில் உருவாகும் 'பஞ்சதந்திரம்' என்ற ஆந்தாலஜி படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சமுத்திரகனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹர்ஷா இயக்குகிறார். இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் சுவாதி.
"2018ஆம் ஆண்டு திருமணம் முடிந்தபிறகு நடிக்கத் தோன்றவில்லை. இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். தமிழ், தெலுங்கு, திரையுலகங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. தமிழில் புது இயக்குநர்களின் படமாக இருந்தாலும் நடிக்கத் தயார்," என்கிறார் சுவாதி.

