கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இணையத்தில் வெளியிட தனுஷ் முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மனம் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவான 'ஜகமே தந்திரம்' கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே வெளியீடு காண தயாராகிவிட்டது.
ஊரடங்கு வேளையில் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டது. ஆனால், திரையரங்குகளில்தான் படத்தை வெளியிட வேண்டும் என தனுஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அப்போது தயாரிப்பாளர் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பிரபல நிறுவனம் 'ஜகமே தந்திரம்' படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. படத்துக்கு 18+ என்கிற மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க உகந்த திரைப்படமாக 'ஜகமே தந்திரம்' மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 18ஆம் தேதி அன்று படம் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

