அஞ்சலி கூறும் அறிவுரைகள்
அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுவகைகளைச் சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் நடிகை அஞ்சலி.
நேரத்துக்குச் சாப்பிடுவது, தூங்குவது என்றில்லாமல் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவர் அண்மைய பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
"கொரோனா அச்சம் இருந்தாலும் திரையுலகத்தினர் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் பணியாற்றி வருகின்றனர். நானும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.
"என் தேவைகளைக் கவனிக்க உதவியாளர்கள் உடன் இருக்கின்றனர். படப்பிடிப்பின்போது எல்லோருமே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறோம். கொரோனா இரண்டாவது அலை அனைத்துத் துறைகளையும் வீழ்த்தி இருக்கிறது. நோய்த் தொற்றோடு சேர்ந்துதான் நாம் பயணம் மேற்கொள்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது," என அஞ்சலி தமது பேட்டியில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
நந்திதாவுக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
தற்போது 'ஐ.பி.சி. 376', 'வணங்காமுடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், டுவிட்டர் பதிவு ஒன்றில் தமக்கு திடீரென கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நந்திதா அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் 'புஷ்பா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகிறது.
கதையில் மாற்றம் செய்யும் லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை அடுத்து கமல்ஹாசனை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.
தமிழகத்தில் மே 2ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிப்பதாகவும் படம் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு லோகேஷிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம் கமல். படப்பிடிப்பு துவங்கும் முன்பே அந்த மாற்றங்களைச் செய்வதில் லோகேஷ் குழுவினர் முனைப்பாக உள்ளனர்.

