சென்னையை நேசிக்கும் ராஷ்மிகா
தமிழ்நாடு தனக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிவிட்டது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக சென்னை நகரத்துக்கு வரும்போது மிகவும் சௌகரியமாக உணர்வதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவின் தந்தைக்கு தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாம்.
தாம் நடிக்கும் கதா பாத்திரங்கள் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம் ராஷ்மிகா.
"கார்த்தியுடன் நடித்துவிட்டேன். அடுத்து சூர்யா சாருடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். ஒருவேளை ஒரே சமயத்தில் இருவருடனும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியாவது கால்ஷீட் ஒதுக்கி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்," என்கிறார் ராஷ்மிகா.
'திருமணம் பற்றி யோசிக்கவில்லை'
உடன்பிறந்தவர்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதால் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என்கிறார் நடிகை கோவை சரளா.
இவர் நான்கு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்தவர். இதுவரை 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். இப்போது சரளாவுக்கு 59 வயதாகிறது.
"15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது மனநிறைவு தருகிறது. உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறேன். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முடிந்ததைச் செய்கிறேன். எனவே திருமணம் குறித்து யோசிக்கவில்லை," என்று கூறியுள்ளார் கோவை சரளா.

