சைவ உணவு ஆரோக்கியமான வாழ்வைத் தரக்கூடியது என்கிறார் நடிகை ராஷி கன்னா.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் சைவ உணவுவகைகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறாராம்.
கொரோனா காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது உயிரைக் காக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழில் தற்போது 'அரண்மனை 3', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ராஷி.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது இவருக்கு வருத்தமளித்துள்ளதாம்.
அதனால் தாம் சந்திக்கும் அனைவரிடமும் உடல்நலனில் கவனம் செலுத்தும்படி மறக்காமல் அறிவுறுத்தி வருகிறார்.
"நம்மில் பலர் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம்.
"பணம்தான் அனைத்துவித மகிழ்ச்சியையும் தரும் என்றும் கருதினோம். இந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளது கொரோனா கிருமித் தொற்று.
"ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து என்பதைப் புரிய வைத்ததுடன், பிறர்க்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் அக்கிருமி ஏற்படுத்தி உள்ளது.
"எனக்குத் தெரிந்து ஆரோக்கியமான வாழ்வைக் கடைப்பிடித்தவர்கள் கொரோனாவின் அச்சுறுத்தலையும் மீறி நன்றாக இருக்கிறார்கள். அத்தகையவர்களிடம் இருந்து நாம் அனைவரும் பாடம் கற்கவேண்டும்," என்கிறார் ராஷி கன்னா.
சிறு வயது முதலே தமது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா விவகாரம் தலைதூக்குவதற்கு முன்பே பல பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வந்ததாகச் சொல்கிறார்.
"சொன்னால் நம்பமாட்டீர்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் முன்பே என் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் எனக்கு இருந்தது.
"நான் செல்லும் இடங்களில் சிறிதளவு தூசு இருந்தாலும் எனக்கு ஒத்துக்கொள்ளாது. உடனே கைக்குட்டையை எடுத்து முகக்கவசம் போல் அணிந்துகொள்வேன். அதனால்தான் முகக்கவசம் அணியவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது அது எனக்கு எந்த வகையிலும் சிரமத்தை அளிக்கவில்லை," என்கிறார் ராஷி.
நீண்ட நாட்களாகவே தாம் வெந்நீர் மட்டுமே குடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சைவ உணவு பலவகையிலும் தமக்குப் பலனளிப்பதாகச் சொல்கிறார்.
"எந்தவிதமான கிருமி தாக்கினாலும் நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதற்கேற்ப நம்மிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும் எனில் அதற்கேற்ற நல்ல உணவுப்பழக்கம் இருக்கவேண்டும்.
"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் நாள்தோறும் இருபது நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்பதே நான் அனைவருக்கும் முன்வைக்கும் அறிவுரை. நான் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பலனடைகிறேனோ அவற்றை மட்டுமே மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறேன்," என்கிறார் ராஷி கன்னா.
தற்போது நடித்துள்ள 'அரண்மனை' மூன்றாம் பாகத்தில் இவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதில் ஆண்ட்ரியாவும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். மேலும் சாக்ஷி அகர்வாலும் இருக்கிறார்.
"பேய்ப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் இயக்குநர் சுந்தர்.சி. படம் என்றால் நகைச்சுவைக்கும் உத்தரவாதம் உண்டு.
"அதனால் எங்கள் கூட்டணி ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும். ஆர்யா மிக உற்சாகமான மனிதர். எப்போதும் அரட்டை அடித்தபடி இருப்பார். எனினும் இந்தப் படத்தில் அவர் ரசிகர்களைப் பயமுறுத்துவார். ஏன் என்பதை படத்தை திரையில் காணும்போது தெரிந்து கொள்வீர்கள்," என்கிறார் ராஷி கன்னா.
, :
ராஷி கன்னா

