இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. அவருக்கு கொரோனா தொற்றும் இருந்தது என 'ஒன் இந்தியா' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'கனா கண்டேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் கே.வி. ஆனந்த்.
இளம் வயதில் புகைப்பட செய்தியாளராக தமது பயணத்தைத் தொடங்கியவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்து 'தேவர் மகன்', 'திருடா திருடா' போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார்.
'அயன்', 'கோ', 'மாற்றான்', 'அனேகன்', 'கவண்', 'காப்பான்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் ஆனந்த். முன்னணி இயக்குநராக வலம் வந்த இவர், 'காதல் தேசம்', 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2005ஆம் ஆண்டு ஆனந்த் இயக்கிய 'கனா கண்டேன்' படம் வசூலில் சாதிக்காவிட்டாலும் விமர்சன ரீதியில் பாராட்டுப் பெற்றது. அதன்பின்னர் தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வந்தார்.
நேற்று அதிகாலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மனைவி, மகளும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அருகில் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்" என்றும் "ஒளியாய் வாழ்வாய் இனி நீ" என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஜினி, கமல், தனுஷ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

