அமைதியின் ஒலியைக் கேட்டிருக்கிறீர்களா? அதுபோன்ற இனிமையான அனுபவம் கிடைக்காது என்று கவித்துவமாகப் பேசுகிறார் ஆத்மிகா.
தற்போது விஜய் ஆன்டனியுடன் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்து வருபவர், அண்மையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
அழகான மலைகள், சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று என மிக ரம்மியமான சூழலில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படப்பிடிப்புக்காக தினமும் சில கிலோ மீட்டர் தூரம் காரில் செல்ல வேண்டி இருந்ததாம்.
பிறகு ஒரு மலைப்பகுதியில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடந்து சென்றால்தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். அந்த வகையில் சற்றே சிரமப்பட்டதாகச் சொல்கிறார் ஆத்மிகா.
"முழு ஒப்பனை செய்துகொண்டு தினமும் அரை மணி நேரம் மலைப்பாங்கான பகுதியில் நடக்கவேண்டும் என்றபோது முதலில் சங்கடமாக இருந்தது. அதிலும் மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டால் சூரிய ஒளி மிகக் குறைவாக இருக்கும்.
"அடர்ந்த மரங்கள், செடி, கொடிகளுக்கு மத்தியில் நடந்து செல்லும்போது மழையும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான்.
"பல நாள்கள் மழையில் செல்லும்போது வழுக்கி விழப் பார்த்திருக்கிறேன். கூடுமானவரை என் உதவியாளர்களைப் பிடித்துக்கொண்டுதான் நடந்தேன். பிறகு பழகிவிட்டது. அதுமட்டும் அல்ல, அந்த இயற்கையான சூழ்நிலை மனதுக்கு இதமளிக்கத் தொடங்கியது. இயற்கையின் அழகில் என்னையே நான் மறந்துபோனேன்," என்கிறார் ஆத்மிகா.
மழை காரணமாக பல தினங்கள் படப்பிடிப்பு கைவிடப்படுமாம். ஆனால், இதற்காக வருத்தப்படுவதை விட இயற்கையை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பாக கருதத் தொடங்கினாராம்.
"உண்மையில் அந்தப் படப்பிடிப்பு பகுதி எனக்கான புதிய உலகத்தைத் திறந்துவிட்டதாகவே நினைத்தேன். நான் இயற்கைக்கு மிக அருகாமையில் இருப்பதாக உணர்ந்தேன்.
"கைபேசியைப் பயன்படுத்த முடியவில்லை. அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு மரத்தின் அருகில் சென்றால் மட்டுமே கைபேசி 'சிக்னல்' கிடைக்கும். அந்த மரத்துக்கு 'சிக்னல் ஸ்பாட்' என்றே பெயர் வைத்துவிட்டோம். படப்பிடிப்புக்கு மத்தியில் புத்தகங்கள் படிக்கவும் நேரம் கிடைத்தது," என்கிறார் ஆத்மிகா.
மாலை ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பை நடத்த முடியாது என்பதால் தங்கும் விடுதிக்குத் திரும்பிய பிறகு ஏதாவது புத்தகத்தில் மூழ்கிவிடுவாராம்.
"தேனியைப்போல் அழகான இயற்கை சூழ்ந்த இடத்தைப் பார்த்ததில்லை. அங்கு ஏராளமான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
"அரை மணி நேரம் ஓய்வு கிடைத்தாலும் எனது உதவியாளர்களுடன் சுற்றி வந்து இயற்கையை ரசிக்க முடிந்தது. அங்கு யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை என்பதும் வசதியாக இருந்தது.
"அங்குதான் அமைதியின் ஒலியை என்னால் கேட்டு உணர முடிந்தது. இதுபோன்ற அனுபவம் கிடைப்பது வாழ்க்கையில் அரிது," என்று சொல்லும் ஆத்மிகா, காட்டுப் பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடங்களிலும் நடந்து சென்றாராம்.
"உள்ளூர் மக்கள் தந்த பழங்களும் உணவும் அற்புதமாக இருந்ததாகச் சொல்கிறார்.
"அவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அது நமது வேர்களைத் தொட்டுத் திரும்பிய உணர்வை ஏற்படுத்தியது," என்கிறார் ஆத்மிகா.
ஆத்மிகா
, :

