'பகீரா' திரைப்படத்துக்காக செய்துகொண்ட புதிய சிகையலங்காரம் தமது ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றிவிட்டதாகச் சொல்கிறார் பட நாயகி ஜனனி ஐயர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் நவநாகரிக நகரத்துப் பெண்ணாக நடித்துள்ளாராம்.
"இதற்காக அண்மைய புதிய 'ஃபேஷன்' உடைகளை அணியச் செய்தார் இயக்குநர் ஆதிக். மேலும் ஒப்பனையிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் தலைமுடிக்கு செயற்கை மை (டை) பூச வேண்டும் என்பதற்காக மும்பையில் உள்ள ஒப்பனை நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினார். பிறகு விமானத்தில் அங்கு அனுப்பி வைத்தார்," என்கிறார் ஜனனி.
ஆனால் இந்தப் பயணம் அவரை சங்கடத்துக்கும் ஆளாக்கியதாம். புதிய சிகையலங்காரத்துடன் தன்னைக் கண்ணாடியில் பார்த்தபோது தமது தோற்றமே மாறிப்போனதாக ஜனனிக்குத் தோன்றி இருக்கிறது.
எனினும் படக்குழுவினர் தம்மை எப்படிப் பார்க்கப் போகிறார்களோ என்று தயங்கியுள்ளார். இப்படத்தின் நாயகன் பிரபுதேவா.
"நல்லவேளையாக படக்குழுவினர் எனது சிகையலங்காரம் நன்றாக இருப்பதாகக் கூறினர். பிரபுதேவா சாருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை.
"பிறகு சிரித்துக்கொண்டே 'அடியோடு மாறிவிட்டீர்களே. ஒப்பனை நன்றாக இருக்கிறது' என்றார். இப்படி எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது.
"எனினும் படப்பிடிப்பு முடிந்த சில வாரங்களுக்குப் பின்னர் என் தலைமுடியில் பூசப்பட்ட செயற்கை சாயம் தனது வேலையைக் காட்டியது. தலைமுடி வேகமாக உதிரத் தொடங்கியது. சில நாட்களிலேயே ஒருபக்கத் தலைமுடி மட்டும் கொட்டியதால் அதிர்ந்து போனேன்.
"நல்லவேளையாக கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தக் கோலத்தில் என்னை யாரும் பார்க்கவில்லை. பல்வேறு எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தி என் அம்மா வீட்டுச் சிகிச்சைகளை அளித்தார். சுமார் ஐந்து மாதங்களுக்கு நான் பயன்படுத்தாத மூலிகை, எண்ணெய், ஷாம்பூ, கிரீம்கள் சந்தையில் இல்லை எனலாம். எப்படியோ தலைமுடி மீண்டும் வளரத் தொடங்கியது.
"மேலும் எனக்கே உரிய கருங்கூந்தலைத் திரும்பப் பெற்றேன். அதன்பிறகு வாழ்வின் எந்தத் தருணத்திலும் தலைமுடிக்கு செயற்கை சாயம் பூசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், அதற்காக என் சிகையலங்காரத்தை மாற்றவேண்டும்; செயற்கை சாயம் பூசவேண்டும் என்றால், அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் ஏற்கமாட்டேன்," என்கிறார் ஜனனி.