தமது வாழ்க்கைச் செலவினங்களை தாமே சமாளித்துக் கொள்வதாகச் சொல்கிறார் ஷ்ருதி ஹாசன். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வாழ்ந்து வரும் நிலையில் எந்தவொரு விஷயத்திலும் தமது பெற்றோரின் உதவியை எதிர்பார்ப்பதில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷ்ருதி நடித்துள்ள 'லாபம்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் தமக்கு தனிப்பட்ட வகையில் பணத்தேவைகள் இருப்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்து உழைத்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷ்ருதி.
நாடு முழுவதும் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாகச் சொல்பவர், தமது தேவைகளின் காரணமாக ஓய்வெடுக்க முடியாமல் உழைக்கவேண்டி உள்ளதாகக் கூறியுள்ளார்.
"நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு தொகைகளைச் சம்பாதிக்கிறோம். அனைவருக்குமே ஏதேனும் ஒரு வகையில் பணத்தேவைகள் இருக்கின்றன. மின்கட்டணம், வீட்டு வாடகை என பல செலவுகள் இருக்கும். எனக்கும் அது பொருந்தும்.
"அதனால் விரைவில் மீண்டும் எனது பணிக்குத் திரும்ப விரும்புகிறேன். எனக்கென சில எதிர்பார்ப்புகள், சில எல்லைக்கோடுகள் உள்ளன. என் பெற்றோரிடம் நான் உதவிகளை எதிர்பார்க்கவில்லை. 11 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையின் அரவணைப்பில் இருந்தேன்.
"பிறகு தந்தை வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வாழத் தொடங்கினேன். இந்த 11 ஆண்டுகளில் எனது வாழ்க்கையை என் விருப்பத்துக்கேற்ப கட்டமைத்துக் கொண்டதில் பெருமையாக உணர்கிறேன்," என்கிறார் ஷ்ருதி.
தாம் எடுத்துள்ள முடிவுகள் நல்லதா கெட்டதா என்பது இதுவரை தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளில் அனைத்து முடிவுகளையும் தாம் மட்டுமே எடுத்ததாக ஒப்புக் கொள்கிறார்.
"பெருந்தொற்று ஆபத்து தொடங்குவதற்கு முன்பு எத்தனை பேர் கார், வீடு என வாங்கி இருப்பார்கள் என்பது தெரியவில்லை. நான் அறிந்த சில புத்திசாலிகள் கூட பெரிதாக எந்தப் பொருளையும் வாங்கவில்லை. ஆனால், உழைத்து சம்பாதித்த பணத்தில் நான் சொந்த வீடு ஒன்றை வாங்கினேன்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஷ்ருதி.
தாம் வீடு வாங்கியதை நினைக்கும்போது பெருமையாகவும் சிலிர்ப்பாகவும் உணர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தம்மைப் போன்று தனித்து வாழும் இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
"எனவே, எனக்கும் பணத்தேவைகள் உள்ளன. நான் வாங்கிய பொருள்களுக்காக ஒவ்வொரு மாதமும் தவணைகளைச் செலுத்த வேண்டும். இந்த நினைப்பு என்னை நேரத்தை வீணடிக்காமல் உழைக்கத் தூண்டுகிறது.
"என்னைச் சுற்றியுள்ள பலர் உணவு வாங்கவும் மருந்து உள்ளிட்டவற்றை வாங்கவும் கூட பணம் இல்லாமல் ஏராளமானோர் தவிக்கின்றனர். அதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். எனவே, நான் சம்பாதிப்பதைக் கொண்டு வாழ்க்கையை நன்றாக கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
"இப்போது பணிச்சூழல் பாதுகாப்பானதாக இல்லை. காரணம் கொரோனா கிருமித்தொற்று அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. அது இப்போது கற்றுக்கொடுத்த பாடத்தை நாம் நூறாண்டுகளுக்கு முன்பே கற்றிருக்க வேண்டும்.
"தனிப்பட்ட ஒருவரின் பழக்கவழக்கம் பிறரைப் பாதிக்காது என்பது தவறான கூற்று என்பதே அந்தப் பாடம்," என்கிறார் ஷ்ருதி.
அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் கூடுதல் நேரம் செலவிடுகிறாராம்.
அவ்வப்போது சில கருத்துகளைப் பதிவிடுவதுடன், புகைப்படங்களை வெளியிடவும் ஷ்ருதி மறப்பதில்லை.
ரசிகர்களுடன் இவ்வாறு தொடர்பில் இருப்பதும் கலந்துரையாடுவதும் உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார்.

