தீவிரவாதம் என்பது ஒரு மதமும் ஒரு நாடும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்றும் 'பார்டர்' படம் இந்தக் கருத்தை வலியுறுத்தும் படைப்பாக உருவாகி உள்ளது என்றும் சொல்கிறார் இயக்குநர் அறிவழகன்.
'ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அவர், இப்போது அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
'பார்டர்' படத்தில் ரெஜினா, ஸ்ஃடெபி பட்டேல் என இரண்டு நாயகிகள் உள்ளனர். உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண்விஜய்.
தமிழ் சினிமா மொழியில் ஒரு புதுவிதமான தேர்ச்சியையும் முன் நகர்வையும் தம்மால் பார்க்க முடிவதாகச் சொல்கிறார் அறிவழகன். இளையர்கள் அதிகம் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டதாகக் குறிப்பிடுபவர், தமக்கும் நல்ல அனுபவங்கள் கிடைத்திருப்பதாகவும் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகி இருப்பதாகவும் சொல்கிறார்.
இவை அனைத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு 'பார்டர்' படத்துக்காக களமிறங்கி இருப்பதாகச் சொல்லும் அறிவழகன், இந்தப் புதிய படம் தேசபக்தி, தீவிரவாதம் என்று பயணப்படும் என்கிறார்.
அடுக்கடுக்காக வந்து விழும் முடிச்சுகள், அவை ஒவ்வொன்றாக அவிழும் விதம் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அமைந்திருக்கும் என்று உத்தரவாதம் அளிப்பவர், இந்தப் படத்தில் தீவிரவாதத்தைக் கடந்து தாம் கவனமாக எழுதிய உணர்வுகளும் நல்ல உளவியலும் இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார்.
டெல்லியும் அதன் சுற்றுப்புறமும்தான் கதைக்களமாம். ஓர் உளவுத்துறை அதிகாரி பார்வையின் வழி படம் நகர்ந்து செல்லும் என்கிறார்.
"தன் வாதத்தை நிரூபிக்க துப்பாக்கியைக் கையில் எடுத்து அதில் பாதிக்கப்படுவது மக்களாக இருக்கும்போது எதுவாக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது. இது தீவிரவாதம் பற்றிய படமா அல்லது உளவுத்துறை பற்றிய படமா என்பதை ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது," என்கிறார் அறிவழகன்.
ஒரு கதையைப் படமாக எடுக்கும் முன்பு, இதை ஏன் படமாக்க வேண்டும்? அதிலும் தாம் ஏன் இயக்க வேண்டும்? என இரு கேள்விகளைத் தமக்குத் தாமே எழுப்பிக்கொள்வாராம். இதற்கு சாதகமான விடை கிடைத்த பிறகே கதையை மெருகேற்றுவாராம்.
"அருண் விஜய்யைப் பொறுத்தவரை உளவுத்துறை அதிகாரியாக பாத்திரத்துடன் அப்படியே பொருந்தி இருக்கிறார். படத்தில் காட்டப் போகும் உணர்வை ஆழமாக உள்வாங்கி நடித்துள்ளார். அவரின் வேகம், உழைப்பு, நேரம் தவறாமை ஆகியவற்றைப் பார்த்து வியந்து போனேன்.
"இந்தப் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இந்தளவு கச்சிதமாக நடித்திருக்க முடியுமா என்று இப்போது என் மனதில் தோன்றுவது உண்மை. கதையில் உள்ள தீவிரத்தையும் தேவைப்படும் உழைப்பையும் அக்கறையையும் புரிந்துகொண்டு அவர் செயல்பட்டதால் படத்தை 45 நாள்களில் முடிக்க இயன்றது. பெருந்தொற்று காலத்தில் இப்படி ஒரு படத்தைத் திட்டமிட்டு முடிப்பதெல்லாம் எளிதான காரியமல்ல," என்று பாராட்டுகிறார் அறிவழகன்.
கதைப்படி ரெஜினாவும் உளவுத்துறை அதிகாரிதானாம். ஸ்டெஃபி பட்டேலுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
"நிறைய அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்றவர் ஸ்டெஃபி. அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. நிச்சயமாக ரசிகர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுப்பார்.
"பொதுவாக என் படத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்க விரும்புவேன். நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களைப் பாதிக்கும். சராசரி மக்கள் அதை வேதம் போன்று கருதுகிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு படத்தை உருவாக்குகிறேன்.
"'விக்ரம் வேதா' பார்த்த பிறகு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உடன் பணியாற்ற விரும்பினேன். முகம் கோணாமல் ஒத்துழைப்பு கொடுத்த விஜய் ராகவேந்திராவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். 'பார்டர்' படத்தில் அதற்கான அடையாளம் இருப்பதுதான் மகிழ்ச்சி," என்கிறார் அறிவழகன். கதை டெல்லியில் நடந்தாலும், சம்பவங்கள் அனைத்துமே நம் மனதிற்கு நெருக்கமான விஷயங்களைப் போல் இருக்குமாம்.

