ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடிக்கும் படம் 'குருதி ஆட்டம்'. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
'எட்டு தோட்டாக்கள்' படத்தை இயக்கி பாராட்டு பெற்றவர் ஸ்ரீகணேஷ். அடுத்த படத்துக்கு அதர்வாவுடன் இணைந்துள்ளார்.
ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இது அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட படமாம். இரண்டு ரவுடிக் கும்பல்களுக்கு இடையே மோதல் வெடிக்கிறது. மதுரைதான் கதைக்களம்.
அதர்வாவுக்கும் ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள் விறுவிறுப்பாகவும் அச்சமூட்டும் வகையிலும் இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர்.
குழந்தை நட்சத்திரமான திவ்ய தர்சினிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
"தயாரிப்பாளர் முருகானந்தம் எனக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் அளித்தார். எனது முதல் படமான 'எட்டு தோட்டாக்கள்' வித்தியாசமான அனுபவத்தை தந்ததாக பல ரசிகர்கள் கூறினர். அதேபோல், இந்தப் படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும்," என்கிறார் ஸ்ரீ கணேஷ்.
சண்டைக் காட்சிகளில் பங்கேற்பதற்காக அதர்வா சிறப்புப் பயிற்சி பெற்றதாகத் தகவல். அந்தக் காட்சிகளின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் இருக்குமாம்.