திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

ஏழைகளுக்கு உதவும் ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு இவர்கள் உணவளித்து வருகிறார்கள். குறிப்பாக சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருட்களையும் வழங்குகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

கடந்தாண்டு ஊரடங்கு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து 145 நாள்களுக்கு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சூர்யா ரசிகர்கள் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

இப்போது தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் மீண்டும் களமிறங்கி உள்ளனர்.

சர்ச்சை கதாபாத்திரத்தில் ரகுல்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் ரகுல் பிரீத்சிங். இதுகுறித்து கேட்டால் சவால்களும் சர்ச்சைகளும் தமக்குப் பிடிக்கும் என்கிறார்.

பிரபல மராத்தி இயக்குநர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் நகைச்சுவை கலந்த சமூகப் படம் ஒன்றில் ரகுலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கதைப்படி நாயகியின் வேடம் சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதை அறிந்த நடிகைகள் சாரா அலிகான், அனன்யா பாண்டே ஆகிய இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் ரகுல் பிரீத்சிங் எடுத்த எடுப்பிலேயே வாய்ப்பை நிராகரிக்காமல் முழுக் கதையையும் சில காட்சிகளையும் விவரிக்கச் சொல்லி கேட்டு, பிறகு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, கொரோனா நோயாளிகளுக்காக நிதி திரட்டும் நல்ல காரியத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் ரகுல்.

தமது முயற்சியில் திரளும் தொகையைக் கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு உயிர்வாயு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

சர்ச்சைக்காக ரகுலை விமர்சிப்பவர்கள் அவர் செய்யும் நல்ல காரியத்துக்காக இப்போது பாராட்டவும் செய்கிறார்கள்.

அதிர வைத்த அனுஷ்கா புகைப்படம்

எந்த நேரத்திலும் அனுஷ்கா வுக்குத் திருமணம் நடை பெறும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப் போது செய்திகள் வெளி யான வண்ணம் உள்ளன.

ஆனால் 39 வயதான அனுஷ்கா திருமணம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதுகுறித்து ரசிகர்களைப் பேச வைத்துள்ளது.

அந்தப் புகைப்படத்தில் உடல் பெருத்துக் காணப்படுகிறார் அனுஷ்கா. புதுப்படம் ஒன்றில் தாம் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக அவர் இவ்வாறு உடல் எடையை அதிகரித்துள்ளாரா என்பது தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவுக்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. அதன் பிறகு மீண்டும் உடல் இளைக்க அவர் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

இந்தியில் நடிக்கும் சாய் பல்லவி

இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சாய் பல்லவி. தெலுங்கில் வெற்றிபெற்ற 'சத்ரபதி' என்ற படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில் தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்க, நாயக் இயக்குகிறார். இதில்தான் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.