இன்றைய சமூகத்தில் பெண்களின் எந்தத் தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவித தனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் இயக்குநர் தமயந்தி.
பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தராதபோது என்ன ஆகிறது என்பதை விவரிக்கிறது இவரது கைவண்ணத்தில் உருவாகும் 'காயல்' திரைப்படம்.
நல்ல தருணங்களை ஒரு சினிமாவில் பதிவு செய்வது சாதாரண காரியமல்ல என்று குறிப்பிடும் தமயந்தி, அப்படியொரு முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாக சொல்கிறார்.
"பெரும்பாலான குடும்பங்களில் ஒருவித ஆழமான மௌனம் உறைந்திருக்கும். அவற்றைக் கீறும்போது சில விளைவுகள் ஏற்படவே செய்யும். அதைக் 'காயல்' படத்தில் பதிவு செய்கிறேன்.
"தந்தை-மகள், அம்மா-மகள் எனும் உறவு இருக்கிறதே... அதில் மிகுந்த அழகும் அர்த்தமும் இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்று ஆண்டுகள் கடந்தோடி விட்டன. ஆனால், இன்னும்கூட பல வீடுகளில் நான் குறிப்பிட்ட அப்பா-மகள், அம்மா-மகள் உறவுக்கு மத்தியில் ஒருவித சுதந்திரப் போராட்டம் நடந்தபடிதான் இருக்கிறது," என்கிறார் தமயந்தி.
ஒட்டுமொத்த ஆண் வர்க்கமும் மிக மோசமானது என்று சொல்லப்படும் கூற்றை உடைக்க விரும்புவதாகக் குறிப்பிடுபவர், ஆண், பெண் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை 'காயல்' படம் விரிவாகப் பேசும் என்கிறார்.
அதேசமயம் எந்தத் தரப்பின ருக்கும் ஆதரவாக பரிந்து பேசுவது தமது நோக்கமல்ல என்றும் படம் பார்க்கும்போது இதை உணரமுடியும் என்றும் சொல்கிறார்.
"நான் எதிர்க்கும் அதிகாரம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் இன்னமும் கூட ஒருவரிடம் கேட்கப்படும் இரண்டாவது கேள்வி, 'நீங்க என்ன ஆளுங்க' என்பதுதான்.
"அந்தக் கேள்வி தவறு என்பதுகூட அதைக் கேட்பவர்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஆழ்மன சாதிய உணர்வை இந்தப் படம் சுட்டிக் காட்டும்," என்கிறார் தமயந்தி.
'கபாலி'யில் நடித்த லிங்கேஷ்தான் இப்படத்தின் நாயகன். தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டுகிறார் தமயந்தி. நாயகிகளாக காயத்ரி, அனுமோல் இருவரும் நடித்துள்ளனர்.
"இந்தப் படத்துக்கான கதையை எழுதும்போதே லிங்கேஷ் என் மனதில் தோன்றினார். அவர் ஒரு தமிழ் முகமாக மனதில் பதிந்து விட்டார். சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் காணமுடிந்தது.
"காயத்ரியைப் பொறுத்தவரை மிகச்சிறந்த நடிகை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் கண்களில் ஒரு மெல்லிய இனம்புரியாததோர் சோகம் குடிகொண்டிருக்கும். அவரது நடிப்பு இந்தப் படத்துக்கு பலம்.
"அனுமோல் என்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர். நான் எப்போது அழைத்தாலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் நடிப்பார். பாடகி சுவாகதா, ஐசக் வர்கீஸ் ஆகியோரும் உள்ளனர்," என்கிறார் தமயந்தி.
'காயல்' படத்துக்கு ஜஸ்டின் கெனன்யா இசையமைக்க, ரமேஷ் வைத்யாவும் தமயந்தியும் பாடல்களை எழுதியுள்ளனர்.
"இதுபோன்ற பயணக் கதைகளை குறைந்த செலவில் படமாக்குவது கடினமான வேலை. அதற்கு இடம் கொடுக்காமல் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் பெரிய பலமாக இருந்தார்.
"நீதி சொல்வது என் பணியல்ல. அதற்கு அப்பழுக்கில்லாத மனசும் தனித்துவமான சிந்தனையும் தேவை. எனவே, நிலைமை இப்படி இருக்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். என் படம் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்," என்கிறார் தமயந்தி.

