'சவாலான வேடங்கள் பிடிக்கும்'
சவாலான கதாபாத்திரங்கள் என்றால் சிறிதும் தயக்கமின்றி அதில் நடிக்க தான் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் நடிகை ரெஜினா.
'மிட்நைட் ரன்னர்ஸ்' என்ற கொரிய மொழித் திரைப்படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது. 'ஷாகினி, தாகினி' என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படுமாம்.
இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் ரெஜினா. மேலும் நிவேதா தாமசும் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
"கடந்த ஓராண்டில் மட்டும் நான்கைந்து சவாலான கதாபாத்திரங்கள் தேடிவந்தன. எதையும் ஏற்க மறுக்கவில்லை. காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் நடந்துவருவதும் சண்டையிடுவதும் பிடித்தமான அனுபவம். அதை இயக்க மனமில்லாததால் நடிக்க சம்மதித்தேன்.
"அதேசமயம் கதைக்களம் எனக்கான கதாபாத்திரமும் வலுவாக இருக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறேன். மேலும் ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று நாயகிகள் இருப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை," என்கிறார் ரெஜினா.
படப்பிடிப்பு: நடிகை சாந்தினி புகார்
கொரோனா ஊரடங்கின் போதும் ஆங்காங்கே சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக நடிகை சாந்தினி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"அனுமதி இன்றி எவ்வாறு படப்பிடிப்புகளை நடத்தலாம். சென்னையில்தான் இத்தகைய படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இது பொறுப்பற்ற செயல்.
"அனைத்தையும்விட மக்களின் உயிர்தான் முக்கியம். இதற்கு தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்," என்று சாந்தினி தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 'வில் அம்பு', 'கவண்', 'வஞ்சகர் உலகம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

