கொரோனா பரவல் தடுப்புப் பணிக்கு நிதி அளிப்பதில் தமிழ்த் திரையுலகத்தினர் முனைப்பாகவும் அக்கறையுடனும் உள்ளனர்.
உச்ச நட்சத்திரமான ரஜினி முதல் புது நாயகர்கள் வரை பலரும் தங்களால் முடிந்த தொகையை அளித்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் தடுப்புப் பணிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ரஜினி ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
இதேபோல் நடிகர் சிவகுமார் குடும்பத்தாரும் ஒரு கோடி வழங்கி உள்ளனர். ரஜினியைப் பொறுத்தவரை தமிழகத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே தமது வாழ்த்தைத் தெரிவித்தார்.
கொரோனா நிதி குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தனது உதவியாளரை அழைத்து நிதி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாராம்.
இதையடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சிவகுமார் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் முதல்வரை நேரில் சந்தித்து நிதியளித்தார். ஏற்கெனவே தமக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த சிவகுமாருக்குப் புதிய முதல்வர் நன்றி தெரிவித்தாராம்.
அதன்பிறகு ஓரிரு நிமிடங்கள் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து சிவகுமார் நினைவுகூர்ந்ததாக தெரிகிறது.
நடிகர் அஜித் இதுபோன்று நிதி வழங்குவதையும் உதவி செய்வதையும் ரகசியமாக வைத்திருப்பார். எனினும் சில நாட்கள் கழித்து விஷயம் வெளியே வந்துவிடும்.
ஆனால் இந்த முறை கொரோனா தடுப்புப் பணிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியளித்த கையோடு வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து ஐந்து லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் பங்குக்கு 25 லட்சமும் சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான திலீப் சுப்பராயன் 1 லட்சமும் நிதி அளித்துள்ளனர்.
இயக்குநர் சி.எஸ்.அமுதன் 50 ஆயிரம் அளித்துள்ளார். பின்னர் தனது டுவிட்டரில் பதிவிட்ட அவர், அனைவரும் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சன் தொலைக்காட்சி 30 கோடி ரூபாய் நிதியளிப்பதாகக் கூறி அனைவரையும் அசர வைத்துள்ளது.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த', விஜய் நடிக்கும் 'தளபதி 65', சூர்யாவின் 40வது படம் என மூன்று பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு படங்கள் தயாரிக்கும் நிலையில், தமிழக அரசுக்கும் பெருந்தொகையை நிதி வழங்கியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் இந்நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அஜித் நிதி வழங்கிய பிறகும் விஜய் சும்மா இருக்கலாமா என்று ஒருதரப்பினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு விஜய் தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
இப்படித்தான் கடந்த முறை தமிழக அரசுக்கு நிதி வழங்குவதில் விஜய், அஜித் ரசிகர்களிடையே இணைய வெளியில் மோதல் வெடித்தது. அப்போது அஜித்தை விட விஜய் அதிக தொகை கொடுத்ததாக கூறப்பட்டதால் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடினர்.
இதற்கிடையே கோடம்பாக்கத்தில் உள்ள பல்வேறு திரையுலக சங்கங்களும் நிதியுதவி அளிக்க தயாராகி வருகின்றன.
அதே சமயம் திரைப்படத் தொழிலாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கடந்த முறை ஊரடங்கின்போது படப்பிடிப்புகள் ரத்தானதால் போதிய வருமானமின்றி திரைப்படத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு தவித்தனர்.
அப்போது முன்னணி நடிகர்கள், நடிகைகள் தங்களால் இயன்ற தொகைகளை தொழிலாளர்களுக்கு அளித்தனர். அதே போன்று இம்முறையும் தொழிலாளர்களுக்கு உதவ சம்பந்தப்பட்ட சங்கங்கள் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

