'தளபதி 65' படத்தில் ஒப்பந்தமானதும் பூஜா ஹெக்டேவின் மவுசு தென்னிந்திய சினிமாவில் அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது.
சூட்டோடு சூடாக அவர் தனது ஊதியத்தை அதிகரித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை எந்த நடிகையும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் தாம் நடிக்க இருப்பதாகக் கூறியுள்ளார் பூஜா.
வேறொன்றுமல்ல, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவருகிறது 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' திரைப்படம். இதில் நாகார்ஜுனா நாயகனாக நடிக்கிறார்.
பூஜாவுக்குப் பெரும் தொகையை சம்பளமாக கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் 'ஸ்டேண்ட் அப் காமெடி' செய்பவராக நடிக்கிறாராம் பூஜா.
மேடையில் ஏறி, சரளமாகவும் சுவாரசியமாகவும் இடைவிடாமலும் நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் உடல் மொழியாலும் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பவர்கள் 'ஸ்டாண்ட் அப்' நகைச்சுவையாளர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
"ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்தக் கலையில் இப்போது பெண்களும் முத்திரை பதித்து வருகின்றனர். இந்தக் கதாபாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதனால் இயக்குநர் கதையை விவரித்து முடிக்கும் முன்பே நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்கிறார் பூஜா.
அண்மையில் இவர் செய்த நல்ல காரியத்துக்காக திரைப் பிரபரலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
உடலில் உயிர்வாயுவின் அளவை கண்டறிய உதவும் மருத்துவக் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விவரிக்கும் ஒரு காணொளிப் பதிவில் பூஜா இடம்பெற்றுள்ளார்.
இந்தக் கருவி கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். எனினும் பலருக்கு இதைப் பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை.
"எனவே, நான் எளிய செயல்முறை விளக்கத்தின் மூல்ம அக்கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அந்தக் காணொளியில் விவரித்துள்ளேன். இது எளிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் பூஜா.
'தளபதி 65' படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ஆவலுடன் காத்திருக்கிறாராம். விஜய் ரசிகர்கள் தன் மீது காட்டும் பாசம் நெகிழ வைப்பதாகச் சொல்கிறார்.
"ஜார்ஜியாவில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கும் கூட விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். அவர்களின் அன்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்," என்கிறார் பூஜா.

