ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் வழக்கமான பிரச்சினைகள் என கோடம்பாக்கத் திரையுலகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
கிருமித்தொற்று கட்டுக்குள் வந்ததும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளியீடு காணும் எனும் எதிர்பார்ப்பில் முன்னணி நாயகர்களின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இல்லையெனில் நேரடியாக இணையத்தில் அப்படங்கள் வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்துள்ள புதுப்படங்களின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.
விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்', சிவாவின் 'டாக்டர்' ஆகிய இரு படங்களையும் நேரடியாக இணையத்தில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அப்படங்களை வெளியிடும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இரு படங்களின் வெளியீடு தொடர்பாக திடீர் பஞ்சாயத்துகள் தொடங்கியுள்ளன. கடந்தாண்டு கொரோனா விவகாரம் தீவிரமடைந்தபோது சூர்யா நடித்த 'சூரரைப் போற்று', அவர் சொந்தமாக தயாரித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய இரு படங்களையும் இணையத்தில் நேரடியாக வெளியிட்டனர்.
ஆனால், 'சூரரைப் போற்று' இணையத்தில் வெளியான பிறகு அதன் செயற்கைக்கோள் உரிமத்தை வாங்கியிருந்த வகையில் சன் தொலைக்காட்சியிலும் அப்படம் ஒளிபரப்பானது. அதுதான் இப்போதைய சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.
'துக்ளக் தர்பார்', 'டாக்டர்' ஆகிய இரு படங்களின் 'ஓடிடி' வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம், செயற்கைக்கோள் உரிமத்துக்கும் சேர்த்துதான் விலைபேசியுள்ளதாம். ஆனால், இவ்விரு படங்களின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை வேறொரு முன்னணி நிறுவனம் ஏற்கெனவே வாங்கிவிட்டதாம். இதனால் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை அணுகிய இரு படங்களின் தயாரிப்புத் தரப்பும் தாங்கள் விற்ற உரிமையை மீண்டும் திரும்பக் கொடுக்குமாறு கேட்டதாகத் தகவல்.
ஆனால், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இன்னும் சாதகமான பதிலைத் தரவில்லையாம். எனவே, இரு படங்களும் நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு முழுவீச்சில் இயங்க குறைந்தபட்சம் அக்டோபர் மாதம் ஆகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தவிப்பில் இருப்பதாகத் தகவல்.
எப்படியாவது பட வெளியீட்டு உரிமங்களை வாங்கியுள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணுமாறு சிவாவும் விஜய் சேதுபதியும் தயாரிப்புத் தரப்பைக் கேட்டுக் கொண்டுள்ளனராம்.

