வரும் புதன் முதல் மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை

வரும் புதன் முதல் மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை

2 mins read
3176e564-2355-4f6b-8532-8508600e0cb1
-

சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, 19ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து இம்மாதம் 28ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை இடம்பெறும். அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்லூரிகளுக்கும் மில்லெனியா கல்வி நிலையத்திற்கும் சிறப்புக் கல்வி பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.

கடும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் அரையாண்டு ஜிசிஇ 'ஓ' மற்றும் 'ஏ' நிலை தாய்மொழிப் பாடத் தேர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று கல்வி அமைச்சுஇன்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை இடம்பெறும் காலகட்டத்தின்போது கற்றல் நடவடிக்கைகள் இடையூறின்றித் தொடர ஏதுவாக, மாணவர்கள் இணையம் வழியாகவும் கைப்பிரதிகளைக் கொண்டும் படிக்கும் வகையில் பள்ளிகள் ஆதரவையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்.

மின்னிலக்கக் கருவிகள் அல்லது இணைய வசதி தேவைப்படும் மாணவர்களுக்கும் பள்ளிகள் உதவ வேண்டும்.

"கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறந்திருக்கும். குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் அல்லது மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாத பெற்றோர்கள், உதவிக்காக தங்கள் பிள்ளைகள் படிக்கும் தொடக்கப் பள்ளிகளை அணுகலாம்," என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

சாத்தியப்பட்டால் உயர்கல்வி நிலையங்கள் ஜூன் 13ஆம் தேதி வரை அதிகமான வகுப்புகளை இணையம் வழியாகக் கற்கும்படி மாற்ற வேண்டும்.

ஆய்வக, செய்முறை வகுப்புகள், இறுதியாண்டு ஒப்படைப்புகள் போன்ற நேரில் கற்க வேண்டிய அவசியமுள்ள வகுப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சிங்கப்பூரில் இன்று சமூகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் 18 பேர், ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் இப்போதைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள்.

பள்ளி விடுமுறையை முன்கூட்டியே கொண்டு வராமல் வீட்டில் இருந்தபடி கற்கும் நடைமுறையை அமல்படுத்துவது ஏன் எனக் கேட்டதற்கு, வீடுகளுக்கு வெளியே முடிந்த அளவு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வதே அதன் நோக்கம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் விளக்கமளித்தார்.

அடுத்த இரு வாரங்களில் மாணவர்களை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் கருத்துரைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சான், வீட்டில் இருந்தபடி கற்கும் நடைமுறை அந்த இலக்கின் ஒரு பகுதியை அடையச் செய்யும் என்று குறிப்பிட்டார்.