திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

வாழ்த்துகளால் நெகிழ்ந்த அம்ரிதா

தமது பிறந்தநாளுக்கு ரசிகர்களிடம் இருந்து குவிந்த வாழ்த்துகளால் நெகிழ்ந்து போயிருப்பதாகச் சொல்கிறார் நடிகை அம்ரிதா ஐயர்.

'பிகில்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவருக்கு மே 14ஆம் தேதி பிறந்தநாள். இதை அறிந்த ரசிகர்கள் பலர் நேரடியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் வாழ்த்து சொல்லி திணறடித்து விட்டனராம்.

கொரோனா விவகாரம் காரணமாக இந்தாண்டு தமது பிறந்தநாளைப் பெரிதாகக் கொண்டாடவில்லை என்றும் வீட்டிலேயே குடும்பத்தாருடன் பொழுதைச் செலவிட்டதாகவும் கூறியுள்ளார் அம்ரிதா.

"இந்த ஊரடங்கு வேளையில் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். ரசிகர்களின் வாழ்த்து இல்லை என்றால், எனது பிறந்தநாள் மற்றொரு சாதாரண நாளாக கடந்து போயிருக்கும். உண்மையான, அன்பு உள்ளங்களின் வாழ்த்தால் இது மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்துவிட்டது," என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அம்ரிதா.

வில்லியாக மிரட்டப்போகும் பூர்ணா

'பவர்பிளே' என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார் பூர்ணா.

பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகார மட்டம் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை சித்திரிக்கும் கதையாம்.

தெலுங்கு இயக்குநர் விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்தருண் நாயகனாகவும் கோட்டா சீனிவாசராவ் முக்கிய வேடத் திலும் நடித்துள்ளனர்.

"கோட்டா சீனிவாசரா வின் வில்லத்தனம் எப்படிப் பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் வில்லத்தனத்தில் போட்டி போட்டிருக்கிறேன். இந்தப் படம் தெலுங்கிலும் பெயர் வாங்கிக் கொடுக்கும் என நம்புகிறேன்," என்று சொல்லும் பூர்ணா, தற்போது தமிழில் 'தலைவி' படத்தி லும் 'த்ரிஷ்யம்-2' தெலுங்கு மறுபதிப்பிலும் நடித்து வருகிறார்.

வருத்தத்தில் விஜய் ஆண்டனி

படப்பிடிப்பில் பங்கேற்காதது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று ஒட்டுமொத்த திரையுலகையும் முடக்கிவிட்டதாக அவர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"தினமும் காலையில் சீக்கிரம் கண்விழித்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வது, எனது கதாபாத்தி ரத்துக்காக தயாராவது, வசனங்களைப் படித்து புரிந்து கொள்வது, இயக்குநருடன் ஆலோசிப்பது என நாள்கள் பரபரப்பாக இருக்கும்.

"நடிப்பும் அதனுடன் இணைந்துள்ள உணர்ச்சி வெளிப்பாடும் உள்ள இடம் படப்பிடிப்புத்தளம். மிக அழகான அந்த இடத்தை இழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

"இந்தக் கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன். அதுவரை மற்றவர்களுடன் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே பகிருங்கள்," என்று விஜய் ஆண்டனி மேலும் தெரிவித்துள்ளார்.

மே 31 வரை படப்பிடிப்புகள் ரத்து

மே 31ஆம் தேதி வரை தமிழகத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கான அனைத்து படப்பிடிப்பு களும் ரத்து செய்யப்படுவதாக திரைப்படத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. படப்பிடிப்பின்போது தொழிலாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுவதாக பலரும் கவலை தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.