'இந்தியன்-2' படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத்சிங்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் அர்ஜுன் கபூர், அஜய் தேவ்கன், ஜான் ஆப்ரகாம் என முன்னணி நடிகர்களுடன் 'டூயட்' பாடுபவர் தெலுங்கிலும் வெற்றி வலம் வருகிறார்.
பல மொழிகளில் நடிப்பதால் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு இல்லாத மாநிலங்களில் நடைபெறும் படங்களில் பங்கேற்று வருகிறாராம்.
உடல்நலத்தை நல்லவிதமாகப் பேணுவதும் உடற்பயிற்சி உள்ளிட்ட நல்ல பழக்க வழக்கங்களாலும்தான் தம்மால் தொடர்ந்து இடைவிடாமல் உழைக்க முடிகிறது என்கிறார் ரகுல்.
தனது ரசிகர்களும் தன்னைப் போலவே நலமுடன் இருக்கவேண்டும் என விரும்புவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் ராணுவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அதனால் என் குழந்தைப் பருவம் மிகவும் கட்டுக்கோப்பாகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தது. இப்போதுகூட எனது அனைத்துச் செயல்களிலும் ஒருவித ஒழுங்கு இருக்கும்.
"பள்ளி நாட்களில் காலை ஐந்தரை மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுவார்கள். அப்போதுதான் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க முடியும். விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகபட்சம் காலை எட்டு மணி வரை தூங்கினாலே பெரிய விஷயம். அந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கும்," என்று குழந்தைப்பருவத்தை நினைவு கூர்கிறார் ரகுல்.
பின்னாட்களில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தாம் பங்கேற்க இத்தகைய கண்டிப்பான வளர்ப்புதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தந்தைதான் தமது வெற்றிகளுக்கான முக்கியக் காரணம் என்கிறார்.
தினமும் பள்ளிப் பாடங்களைப் படிக்கும் பழக்கம் இவருக்கு இருந்ததில்லையாம். தேர்வுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்புதான் பாடப்புத்தகங்களைப் புரட்டத் தொடங்குவாராம்.
"அப்படி இருந்தும் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படித்துவிடுவேன். நல்ல மதிப்பெண்களும் பெறுவேன். நான் இவ்வாறு இடைவிடாமல் படிப்பதைப் பார்த்து ஒரு மணி நேரமாவது வெளியே சென்று விளையாடிவிட்டு வா என்று அப்பா ஆறுதலாகச் சொல்வார்.
"நன்றாகப் படித்தாலும்கூட மருத்துவராகவோ பொறியியலாளராகவோ ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்," என்று கூறியுள்ளார் ரகுல் பிரீத்சிங்.
கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தமது பேட்டியில் விவரித்துள்ளார் ரகுல்.
அண்மைக்காலமாக உடல்நலம், நோய் எதிர்ப்பு சக்தி, மூச்சுப் பயிற்சி, யோகா குறித்துப் பேசுவது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உடற்பயிற்சி என்றாலே அது விளையாட்டு வீரர்களுக்கானது எனப் பலரும் நினைப்பது தவறு என்கிறார்.
தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று குறிப்பிடுபவர் யோகாசனம் என்பது அழகான உணர்வு என்கிறார். சினிமாவில் உடலை வளைத்து நெளித்து நடனமாட இவருக்கு யோகாசனம்தான் கைகொடுக்கிறதாம்.
"பாட்டி வைத்தியம் என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருப்போம்.
"வீட்டுச் சமையல் மூலமாக அனைத்து உடல் உபாதைகளுக்கும் தீர்வு காணக்கூடிய மருத்துவ முறை அது.
"அதேபோல் பாட்டி சமையல் என்றும் கூறுவார்கள். அவற்றை நாம் பின்பற்றினால் நீண்டகாலம் நோயின்றி வாழ முடியும். என்னைப் பொறுத்தவரை ஒழுங்கான, ஒழுக்கமான வாழ்க்கைமுறை இருந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. மேலும் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை வைத்துக் கூறும் அறிவுரைகளையும் நாம் புறக்கணித்துவிடக் கூடாது," என்கிறார் ரகுல்.

