சவாலான வேடத்தில் சமந்தா
இணையத்தொடர் ஒன்றில் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக (ஸ்லீப்பர் செல்) நடிக்கிறார் சமந்தா.
'த பேமிலி மேன்' என்ற இணையத்தொடரின் இரண்டாம் பாகத்தில் சமந்தாவின் இந்தக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்தித் திரையுலகின் இரட்டை இயக்குநர்களான ராஜ்-டிகே இத்தொடரை இயக்கி உள்ளனர்.
"பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பலின் ரகசிய முகவராக நடித்துள்ளேன். இதற்காக தீவிரவாத இயக்கங்கள் குறித்து நிறைய தகவல்களைப் படித்து தெரிந்துகொண்டேன். வில்லியாக, சமூக விரோதியாக நடிப்பது மாறுபட்ட அனுபவத்தைத் தந்தாலும் கூடுதலாக மெனக்கெட வேண்டி இருந்தது," என்கிறார் சமந்தா.
இந்தத் தொடர் வெற்றியடையும் பட்சத்தில் இணையத் தொடர்களில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறாராம்.
'பாலா சொன்னதால் நடித்தேன்'
இயக்குநர் பாலா தயாரிப்பில் தாம் நடிக்க இருந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஜோசப்' திரைப்படம் தமிழில் 'விசித்திரன்' என்ற தலைப்பில் மறுபதிப்பாகிறது. இதை பாலா தயாரிக்கிறார்.
'ஜோசப்' படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழ் மறுபதிப்பையும் இயக்குகிறார். ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். "விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த பாத்திரத்தில் என் பெயரை பாலா சார் இயக்குநரிடம் பரிந்துரை செய்தார். அவர் சொன்னதால் தயக்கமின்றி இந்தப் படத்தில் நடிக்கிறேன்," என்று ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளார்.

