கமல்ஹாசன் நடிக்கும் புது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.
தனது கதாபாத்திரத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக நேர்த்தியாக உருவாக்கி இருப்பதாக அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகிறது 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைகிறார்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பே படப்பிடிப்பைத் துவங்க இருந்தனர். எனினும் கடைசி நேரத்தில் கதையில் சில மாற்றங்களைச் செய்யும்படி இயக்குநரை கேட்டுக்கொண்டார் கமல்.
மேலும் விஜய் சேதுபதியை அணுகியபோது அவரும் தனது கதாபாத்திரம் வழக்கமான வில்லத்தனம் செய்வதாக இருந்தால் தாம் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
இதனால் அவரது கதாபாத்திரத்தையும் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் லோகேஷுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து தனது குழுவினருடன் விவாதித்து உரிய மாற்றங்களைச் செய்துள்ளார் லோகேஷ்.
பின்னர் சேதுபதியிடம் அவர் இந்த மாற்றங்கள் குறித்து விவரித்துள்ளார். அதைக் கேட்ட சேதுபதி, கதையும் கதாபாத்திரமும் அருமையாக இருப்பதாகப் பாராட்டினார்.
கமல் தரப்பிலும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த கையோடு படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.
இதற்கிடையே, விஜய் சேதுபதி ஒரு புது முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்.
இனி தாம் நடிக்கும் படங்களுக்கான சம்பளத்தை தொழில்நுட்பப் பணிகள் துவங்குவதற்கு முன்பே முழுமையாக கொடுத்துவிட வேண்டும் என தயாரிப்புத் தரப்புக்கு நிபந்தனை விதிக்கப்போகிறாராம்.
கடந்த காலத்தில் தனது படங்கள் வெளியாகும்போது தயாரிப்பாளர்களுக்கு உள்ள தனிப்பட்ட, தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்காக தனது சம்பளத்தை பலமுறை குறைத்துக் கொண்டுள்ளார் சேதுபதி. சில சமயங்களில் மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்துள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது என முடிவு செய்துள்ளாராம்.
அதே சமயம் அறிமுக இயக்குநர்கள், தரமான படங்களைத் தயாரிக்கும் சிறிய நிறுவனங்களுக்காக சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சேதுபதி எப்போதுமே தயார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

