'புதுப்பேட்டை', 'அசுரன்' படங்களின் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்.
சில தினங்களுக்கு முன்பு தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் நிதிஷ் வீரா. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் நிதிஷ்.
அதன் பிறகு விஷ்ணு விஷால் நடித்த 'வெண்ணிலா கபடி குழு', ரஜினி நடித்த 'காலா' உள்ளிட்ட படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார்.
இறுதியாக வெற்றிமாறன் நடிப்பில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்திலும் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையே இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
அவரது மனைவி சிந்துஜாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார்.
இருவரது மறைவுக்கும் திரையுலகத்தினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

