இயக்குநரைப் பாராட்டிய நயன்தாரா
'நெற்றிக்கண்' படம் தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உருவாகி உள்ளது என நயன்தாரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. அந்த வகையில் மிலின் ராய் இயக்கத்தில் உருவாகி உள்ளது இப்படம்.
அண்மையில் படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் பார்த்தாராம் நயன்தாரா. அனைத்துக் காட்சிகளுமே தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருப்பதாகச் சொல்லி இயக்குநரையும் படக்குழுவினரையும் பாராட்டி உள்ளார்.
மேலும், தமக்கு ஏற்ற வகையில் இன்னொரு கதையை தயார் செய்யும்படி மிலின் ராயிடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல். 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்த கையோடு சொந்த ஊரான கொச்சிக்குப் பறந்துவிட்ட நயன்தாரா, அங்கு ஒரு மாதம் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிப்பதை அறவே குறைத்துக் கொள்வது என நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'மாநாடு': இரண்டு நாள்கள் போதும்
இன்னும் இரண்டு நாள்கள் படப்பிடிப்பு நடத்தினால் 'மாநாடு' படம் முடிந்துவிடும் என அதன் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
விமானத்தின் உட்பகுதி யில் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளதாம். இதற்காக மாலத்தீவு செல்ல படக்குழு திட்டமிட்டிருந்தது.
எனினும் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தால் அத்திட்டத்தைக் கைவிட்டுள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் ஓசூர் பகுதியில் இந்த காட்சிகளை எடுக்க உள்ளனர். இப்போது படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோப்பு, பின்னணி குரல்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் துவங்கி உள்ளன. தாயார் மறைவால் துயரத்தில் இருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, இந்தப் பணிகளைக் கவனித்து வருகிறார்.

