ராஷ்மிகா மந்தனாவைப் பொறுத்தவரை எத்தகைய வணிகப் படத்திலும் நடிக்கத் தயார் என்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் கனவுப்படம், விருதுகள் என்றெல்லாம் தமக்கு எந்தவித இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கன்னடத்தில் இவர் நடித்த 'கிரிக் பார்ட்டி' நல்ல வரவேற்பைப் பெற்றது. இது அம்மொழியில் ராஷ்மிகாவின் அறிமுகப்படம். பின்னர் தெலுங்கிலும் இப்படத்தை மறுபதிப்பு செய்தனர். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் 'கிரிக் பார்ட்டி' படக்குழு அதை இந்தியில் மறுபதிப்பு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. கார்த்திக் ஆர்யன் நாயகனாக நடிப்பது உறுதியான நிலையில் ராஷ்மிகாவின் கால்ஷீட் கேட்டு அணுகியுள்ளனர். அவரோ நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஏற்கெனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிப்பதில் தமக்கு ஆர்வமில்லை என்பதைக் காரணமாகச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து ரசிகர்களில் சிலர் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்துள்ளனர்.
தம்மைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களையே ராஷ்மிகா உதாசீனப்படுத்திவிட்டதாக அவர்கள் சாடியுள்ளனர். ஆனால், ராஷ்மிகா இதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.
"ஏற்கெனவே அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை நான் வெளிப்படுத்திவிட்டேன். மீண்டும் புதிதாக என்னால் எதுவும் செய்ய முடியாது.
"ஏற்கெனவே நடித்ததைப்போன்று மீண்டும் நடித்தால், ஒரே மாதிரியான நடிப்பு என விமர்சிப்பார்கள். அதனால்தான் மறுபதிப்பில் நடிக்கவில்லை," என விளக்கம் அளித்துள்ளார் ராஷ்மிகா.
தமது முடிவில் மாற்றமில்லை எனவும் கூறியுள்ளார்.
ராஷ்மிகா
மந்தனா

