தமிழில் வெற்றிபெறும் படங்களுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகத் திரைப்பட விழாக்களிலும் தமிழ்ப் படங்கள் அசத்தி வருகின்றன.
இதையடுத்து தமிழ்ப் படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்வதும் மறுபதிப்பாக்குவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் அஜித்குமார் நடித்த 'வீரம்' திரைப்படம் இந்தியில் மறுபதிப்பாகிறது. இந்தியில் அக்ஷய்குமாரை நாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், அவர் திடீரென விலகிவிட்டதாகத் தகவல்.
அதற்கான காரணம் தெரியாத நிலையில் சல்மான்கான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மறுபதிப்புக்கு 'பை ஈத் கபி தீவாளி' என்று தலைப்பு வைத்துள்ளனர். கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.
மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மிக விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் பட்சத்தில் படப்பிடிப்பை உடனடியாகத் துவங்கலாம் என்று கூறியுள்ளாராம் சல்மான்.
அவருடன் இணைந்து நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார் நாயகி பூஜா. தற்போது விஜய் நடிக்கும் 'தளபதி 65' படத்தில் பூஜா தான் நாயகி.
இதற்கிடையே 'ஒத்த செருப்பு' படமும் இந்தியில் மறுபதிப்பாகிறது. இத்தகவலை அதன் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார்.
தேசிய விருதைப் பெற்றுள்ள இப்படம் உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. டொரோண்டோ உலகத் தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளை வென்றுள்ளது 'ஒத்த செருப்பு சைஸ் 7'.
இந்நிலையில் இப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளிலும் மறுபதிப்பு செய்ய பார்த்திபன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம்.
"இந்திப் பதிப்பில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலப் பதிப்பைப் பொறுத்தவரை 'ட்ரூ லை' படத்தை தயாரித்த முன்னணி நிறுவனத்துடன் பேசி வருகிறோம். படப்பிடிப்புக்கு சிறு குழு போதுமென்பதால் ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது," என்கிறார் பார்த்திபன்.
இரு மொழிகளிலும் தம்முடன் இணைந்து பணியாற்ற அம்மொழிகள் தெரிந்த உதவியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளாராம். இந்த இரு பதிப்புகள் குறித்து விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என்கிறார்.

