பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் 'பொன் மாணிக்கவேல்'. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதேபெயரில் தமிழக காவல்துறையில் பணியாற்றிய அதிகாரி எடுத்துள்ள நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம்.
தமிழகக் கோவில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட ஏராளமான சாமி சிலைகளை மீட்டவர் பொன். மாணிக்கவேல். இந்தப் பெயரில் உருவாகி உள்ள படத்தை ஏ.சி. முகில் இயக்கியுள்ளார்.
பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் அடிதடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, காதல் என ஒரு வணிகப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இருக்குமாம்.
படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
எனவே, நேரடியாக இணையத்தில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

