இனி வழக்கமான வணிகப் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்கிறார் அஞ்சலி.
தரமான கதை அம்சம் உள்ள, ரசிகர்களை மகிழ்விக்கக்கூடிய படங்களில் மட்டுமே இனி தன்னைப் பார்க்க முடியும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் அஞ்சலிக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. தொற்று நெருக்கடியால் புதுப்படங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் கோடம்பாக்கத்தில் இருந்து தெலுங்கு தேசம் பக்கம் ஒதுங்கி உள்ளார்.
அங்கு உருப்படியான வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அண்மையில் தெலுங்கில் இவர் நடித்த 'வக்கீல் சாப்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர்களின் பார்வை அஞ்சலி பக்கம் திரும்பியுள்ளது.
பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் அஞ்சலி, ஊரடங்கு முடிவுக்குவரும்போது தன் கைவசம் நான்கைந்து படங்களாவது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் 'வக்கீல் சாப்' படத்துக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
"பொதுவாக வணிகப் படங்கள் என்றால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன். ஆனால் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரேமாதிரியான படங்களில் நடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
"எனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களும் கதைக்களங்களும் அமைந்தால் எனது நூறு விழுக்காடு திறமையை வெளிப்படுத்த முடியும். அத்தகைய படங்கள் எனது தொழில் வாழ்க்கையில் தலைசிறந்த படைப்புகளாக மாறும்.
"இத்தனை ஆண்டுகளாக என்னையும் எனது பணியையும் நேசித்துப் பாராட்டியதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி நல்ல படங்களைத் தந்து ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்று அஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாராம். வேறொன்றுமில்லை, தனது கணவர் எப்போது சொன்னாலும் திரையுலகை விட்டு விலகிவிடுவேன் என்கிறார். அண்மையில் தனது ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடினார் காஜல். அப்போது தமது கணவர், அவரின் குடும்பத்தார் தமக்கு அளித்துவரும் ஆதரவு குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
"எனது கணவரது பக்கபலம் இல்லை என்றால் என்னால் சினிமா உலகில் நீடிக்க இயலாது. திருமணத்திற்குப் பிறகு எனக்குத் தேவையான அனைத்தையும் என் கணவர் செய்கிறார்.
"எனவே, எனது திரையுலக வாழ்க்கை குறித்து அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன். எவ்வளவு காலம் தொடர்ந்து நடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நடித்தது போதும் என்று என் கணவர் கூறினால் அந்த நிமிடமே திரையுலகில் இருந்து விலகிவிடுவேன்," என்கிறார் காஜல்.
, :
அஞ்சலி

