இயக்குநர் ராதாமோகன் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது 'மலேசியா டூ அம்னீசியா'. இது முழுநீள நகைச்சுவைப் படம். மிக விரைவில் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.
இப்படியொரு வித்தியாசமான தலைப்பு வைக்க என்ன காரணம் என்று கேட்டால், அந்த ரகசியத்தைச் சொல்ல முடியாது என்று சிரிக்கிறார் ராதாமோகன்.
"தலைப்புக்கான காரணத்தைச் சொன்னால் கதையில் உள்ள சின்ன முடிச்சு அவிழ்ந்துவிடும். பிறகு படம் பார்க்கும் ஆர்வம் போய்விடும். எனவே படம் வெளியானதும் பாருங்கள். அந்தத் தலைப்பை வைத்ததற்கான நியாயமான காரணங்கள் நிச்சயம் புரியும்," என்கிறார் ராதாமோகன்.
ஒரு பொய்யைச் சொல்லப்போய் அது விபரீதமாகி, பிறகு சூழ்நிலை வேறு மாதிரியாகிவிடும். சம்பந்தப்பட்டவர்கள் இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
"இதுவரை பத்து படங்களுக்கு மேல் இயக்கிவிட்டேன். பொழுதுபோக்குக்காக படம் எடுத்தாலும் ரசிகர்களின் மனதில் எங்கேனும் ஓர் ஓரத்தில் அந்தப் படம் ஒட்டிக்கொள்ள வேண்டும். படம் பார்ப்பவர்கள் தங்கள் கவலைகளை மறந்து கொஞ்சம் சிரிக்க வேண்டும். அப்படியொரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற நினைப்புதான் இப்படம் உருவாகக் காரணம்.
"இதில் காதலும் நகைச்சுவையும் தூக்கலாக இருக்கும். பொதுவாக மனித உணர்வுகளை விவரிக்கும்போதுகூட நகைச்சுவையைத்தான் நான் துணைக்கு அழைப்பேன். இப்போது இருக்கக்கூடிய 'கொவிட்' நெருக்கடியில் சர்ச்சைக்குரிய, மனதை பாதிக்கக்கூடிய கதைக்களங்களுடன் உருவாகும் படங்களைப் பார்க்கும் மனநிலை பலருக்கு இல்லை.
"இந்தப் படத்தின் தலைப்பைக் கேட்டதுமே ஒரு விடுமுறைக்கால உற்சாகம் மனதுக்குள் தோன்றும். கடைசியாக எந்தக் காட்சிக்கு சிரித்தோம் என்பது மறந்துபோகும் அளவுக்குத் தொடர்ந்து சிரிக்கவைக்கும் கதை இது.
"விடியற்காலையில் நடைபயிற்சிக்காக பூங்கா பக்கம் செல்லும்போது கூட்டமாக நின்று பலர் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிரிப்பதும்கூட பயிற்சியாகிவிட்டது. அப்படியானால் மக்கள் சிரிப்பதே அரிதாகிவிட்டதா என்று தோன்றியது. அந்த உண்மை உறைத்ததும் ஒரு நகைச்சுவைக் கதையைப் படமாக்கவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே மனதில் தோன்றியது," என்கிறார் ராதாமோகன்.
இதில் வைபவ், வாணி போஜன் இணைந்துள்ளனர். மேலும் எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"வைபவ் நாயகனாக மட்டுமல்ல, நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கு நன்றாகப் பொருந்துவார். வெங்கட்பிரபுவின் படங்களில் வைபவ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் பளிச்சென்று தெரிவார். இந்தக் கதையைக் கேட்டதும் அவர் தாமே தயாரிக்க முன்வந்தது வசதியாக இருந்தது.
"வாணி போஜனைப் பொறுத்தவரை தமிழ் தெரிந்த பெண் என்பதால் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார். வழக்கம்போல் இந்தப் படத்திலும் எம்.எஸ். பாஸ்கர் இருக்கிறார். அவரிடம் கதையைச் சொல்லத் துவங்கும் முன்பே இந்தப் படத்திலும் ஒரு காட்சியிலாவது என்னை அழவைத்து விடுவீர்களே என்று சிரித்தபடி கேட்டவரிடம், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியளித்தேன். கருணாகரனுக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளது," என்கிறார் ராதாமோகன்.
இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். பிரேம்ஜி நடிக்கும்போதுதான் அரட்டையடிப்பாரே தவிர, இசையமைப்புப் பணி என்றால் இவர் எதுகுறித்தும் யோசிக்காமல் இசையில் மூழ்கிவிடுவாராம்.
"எனது படங்களில் நகைச்சுவைதான் பின்புலமாக இருக்கும். வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் தொட்டுப் பார்க்க விரும்புகிறேன். என் படங்களில் இடம்பெறும் நகைச்சுவையில் ஆபாசம் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். திடீரென என் மனதில் தோன்றும் கனவுகளில் வந்துவிழும் கதைகளைத்தான் படமாக்குகிறேன்," என்கிறார் ராதாமோகன்.

