தன்னைப்பற்றி எழுதப்படும் காதல் கிசுகிசுக்கள் பெருமளவில் குறைந்துள்ளதால் தான் இப்போது பெரும் நிம்மதியுடன் இருப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங் (படம்).
தமிழில் 'தடையற தாக்க', 'என்னமோ ஏதோ', 'தேவ்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்த ரகுல், இப்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 'அயலான்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியிலும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வருபவர், தெலுங்குத் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழக திரைச்செய்தி ஊடகங்களுக்கு ரகுல் அளித்துள்ள பேட்டியில், "கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளிவந்தன. அவை அனைத்துமே வதந்திகள் என்பதால் நான் அவற்றுக்கு எல்லாம் பதிலேதும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தேன்.
"அதன்பின்னர், ஒரு சமயத்தில் பரவிய வதந்திகள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. இப்போது என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வராததால் நிம்மதியாக உணர்கிறேன்.
"இதுவரை நான் யாருடைய காதல் வலையிலும் விழவில்லை. திருமண பந்தத்தின் மீது உண்மையிேலயே பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று கூறியுள்ள ரகுல், "எனது கையைப் பிடிக்கப்போகும் என் வருங்கால கணவருக்கு என்று சில தகுதிகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
"இந்த விலைமதிப்பற்ற வாழ்க்கைமீது அவருக்கு ஓர் ஆர்வமும் நோக்கமும் இருக்கவேண்டும். நிச்சய மாக, ஆரோக்கிய வாழ்க்கைமுறையை அவர் நேசிக்கவும் வேண்டும்.
"என் திருமணத்தை கடற்கரையில் நடத்த ஆசை உள்ளது. இக் கொடிய கொரோனா காலகட்டம் போனபின்னர்தான் திருமணம் கைகூடும்," என்கிறார் 30 வயது ரகுல்.
இதனிடையே, உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், கூந்தல் பராமரிப்பு குறித்த சில தகவல்களையும் காெணாளி வழி சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"குளிக்கும்போது தினமும் தலை குளித்தால் முடி பாதிக்கப்படும் அல்லது கொட்டிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
"ஆனால், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நாளும் தலை குளிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
"ஒரு முழு முட்டை, வாழைப்பழத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'ஹேர் மாஸ்க்' நல்ல பலன் தரும். அனைத்து இயற்கைச் சத்துகளும் இதில் நிறைந்துள்ளதால் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது என் அம்மாவின் அறிவுரை.
"பிசுபிசுப்பான தலைமுடி அழுக்கை ஈர்க்கிறது, அது பொடுகுக்கும் வழிவகுக்கிறது. முடியின் வேர்க்கால்களைப் பாதித்து முடி உதிர்வு, குறைவான முடிவளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
"எனவே, அதிகமாக வியர்க்கும் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலைமுடிக்கு ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது," என்று ரகுல் காெணாளியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், முடி வளர்ச்சிக்கு சத்தான உணவை உட்கொள்வதும் முக்கியம் என்கிறார்.
இதற்கிடையே, கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ ரகுல் நிதி திரட்டி வருகிறார்.
இதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு ஆக்சிஜன், உயிர் காக்கும் உபகரணங்களை வாங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களால் முடிந்த உதவியை உதவி தேவைப்படுபவர்களுக்கு தயங்காமல் வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் ரகுல்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்படுபவர்கள், உடல் வலிமையைப் பெருக்கிக்கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். அதிக கலோரிகள் உள்ள உணவைச் சாப்பிடுவதைத் தவிருங்கள். நன்கு செரிமானமாகாத உணவுகளைச் சாப்பிட வேண்டாம். பால், வறுத்த, உறைந்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சூடான தேநீர், சூப் வகைகளைச் சாப்பிட வேண்டாம் என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவுறுத்தி உள்ளார் ரகுல் பிரீத் சிங்.

