முன்னணி நாயகர்களுடன் நடிக்கவில்லை என்றோ பெரிய இயக்குநர்கள் அல்லது படத் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றோ நிக்கி கல்ராணி கவலைப்படுவதில்லை.
தன்னைத் தேடிவரும் கதைகளும் கதாபாத்திரங்களும் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்கிறார். நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்காக அவை வெளியீடு காணும்வரை தம்மால் முடிந்த அனைத்து வகையிலும் படக்குழுவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் என்று நிக்கி கல்ராணியை கோடம்பாக்கத்தினர் பாராட்டுகிறார்கள்.
பெரிய விருதுகளைவிட இத்தகைய வார்த்தைகள்தான் தம்மை உற்சாகப்படுத்துவதாக நெகிழ்கிறார் நிக்கி.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'இடியட்' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் இதைப் பார்த்திருப்பதாக வெளியான தகவல் நிக்கியை இருமடங்கு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தப் படத்தில் அழகான பேய், காதல் தேவதை என இருவிதத் தோற்றங்களில் அசத்துவாராம்.
"நகைச்சுவையும் திகிலும் கலந்த படமாக 'இடியட்' உருவாகி உள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் எந்நேரமும் கவலையுடனும் பயத்துடனும் இருக்கிறார்கள்.
"அப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் இந்தப் படத்தைப் பார்க்கும்போது மறைந்து போகும். இரண்டு மணி நேரம் வாய் விட்டுச் சிரிக்கவும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கவும் முடியும்," என்று உத்தரவாதம் அளிக்கிறார் நிக்கி.
'மரகத நாணயம்' படத்தில் இவர் ஆண் குரலில் பேசுவதுபோல் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் உள்ளனவாம்.
"மிர்ச்சி சிவாவை வெறுப்பேற்றி பயமுறுத்துவதுபோல் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று சொல்லி சிரிக்கும் நிக்கி கல்ராணி, இப்போது சென்னையிலேயே குடியேறி விட்டாராம். தமிழ்நாட்டு மக்களை தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார்.
"தமிழ் மக்கள் என்னைத் தங்கள் வீட்டுப்பெண்ணாக ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள். இந்த அன்பு தனித்துவமானது. அதனால் நானும் மனதார சென்னைப் பெண்ணாகிவிட்டேன்.
"சென்னையில் உள்ள ஒவ்வொரு நொடியும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று சொல்லும் நிக்கி, ஊரடங்கின்போது அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார்.
சென்னையில் இரண்டு செல்லப் பிராணிகளை வளர்க்கிறாராம். அதேபோல் அவரது பெங்களூரு வீட்டிலும் நான்கு நாய்க்குட்டிகளை வளர்க்கிறார். கடந்த சில நாட்களாக இந்த செல்லப் பிராணிகளுடன் விளையாடித்தான் பொழுதைப் போக்குகிறார்.
"என்னைப் பொறுத்தவரை சும்மா உட்கார்ந்திருப்பது பிடிக்காது. நான் இருக்கும் இடத்தின் சூழ்நிலையும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் கலகலப்பாக இருக்கவேண்டும் என விரும்புவேன். ஏதாவது பேசி அனைவரையும் சிரிக்க வைப்பது என் வழக்கம். எந்த விஷய மாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேருக்கு நேர் பேசிவிடுவேன். என்னுடைய இந்தப் போக்கு பலருக்குப் பிடிப்பதில்லை. அதுகுறித்து நான் கவலைப்படுவதும் இல்லை.
"அம்மா செய்யும் பிரியாணி ரொம்பப் பிடிக்கும். ஊரடங்கின்போது அவர் பலவிதமான பிரியாணிகளைச் செய்து தருகிறார்.
"எனக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர்
களமிறங்கி விளையாடுவதை நேரில் பார்த்து கைதட்டி ரசிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ஆனால், அது நிறைவேறுவற்குள் சச்சின் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்," என்று சொல்லும் நிக்கி கல்ராணிக்கு, நிஜத்தில் பேய்கள் என்றால் ரொம்பப் பயமாம்.
பேய்ப் படங்கள் எதையும் பார்க்க மாட்டாராம். ஒருவேளை நிஜமாகவே தன் கண் முன்னால் ஒரு பேய் வந்து நின்றால் ஓடிச்சென்று தன் தாய்க்குப் பின்னால் ஒளிந்துகொள்வேன் என்று சொல்லும்போதே முகத்தில் பயம் தெரிகிறது.

