திரைத் துளி-கள்

திரைத் துளி-கள்

1 mins read

ஏழைகளுக்கு உதவும் ரசிகர்கள்

புதுவையைச் சேர்ந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வித்தியாச மான முறையில் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் புதுவையில் பலர் உணவின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் தள்ளுவண்டி ஒன்றில் உணவு, தண்ணீர் புட்டிகள், வாழைப்பழங்கள், பிஸ்கெட் ஆகியவற்றை வைத்து ஏழைகளுக்கு அஜித் ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

அந்த வண்டியில் உணவுகளை இலவசமாக எடுத்துச் சாப்பிடலாம். அதைக் குறிக்கும் வகையில், தள்ளுவண்டியில் 'பசித்தால் எடுத்துக்கொள்' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த உணவுடன் கூடிய தள்ளுவண்டியை ஏற்பாடு செய்ததாகக் கூறும் அஜித் ரசிகர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

குத்துச்சண்டை போடும் ஐஸ்வர்யா

ஊரடங்கு வேளையில் தீவிர குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

புதுப் படம் ஒன்றில் தான் ஏற்றுள்ள கதாபாத்தி ரத்துக்காக இவ்வாறு பயிற்சி பெறுகிறாராம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வித்தியாசமான கதைக்களம் கொண்ட, சவாலான வேடங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

தற்போது 'டிரைவர் ஜமுனா', 'துருவ நட்சத்திரம்', 'திட்டம்-2', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கால் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம். அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.