மீண்ட கதையைச் சொல்லும் ரைஸா
அழகு சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனது முகப்பொலிவை மீண்டும் பெற்றது எப்படி என்று நடிகை ரைஸா விவரித்துள்ளார்.
மீண்டும் புதிய அழகு சிகிச்சை நிலையம் ஒன்றில் ஐந்து வார காலம் சிகிச்சை பெற்றதாகவும் அதன் பலனாக தனது முகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் முகம் கருத்து, பெரிதாக வீங்கிய நிலையில் தமது புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார் ரைஸா.
தவறாக சிகிச்சை அளித்ததாக தாம் குற்றம்சாட்டிய அழகு நிலையத்தின் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க, பதிலுக்கு எதிர்த்தரப்பும் இவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தாம் குணமடைந்திருக்கும் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
சிவா: கொரோனாவை வெல்வோம்
அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று காணொளிப் பதிவு ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
'நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் கொரோனாவை வெல்வோம்' என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசாங்கம் அறிவுறுத்தி உள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது நமது கடமை. கொரோனா பற்றி எந்த பயமும் இல்லாமல் தனது உயிரையும், குடும்பத்தையும் மறந்து நம் எல்லோருக்காகவும் இந்த கொரோனாவை எதிர்த்து போரிட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுவாகத்தான் இருக்கும்.
"நாம் எல்லோரும் நினைத்தால் நிச்சயம் இதில் இருந்து மீண்டுவர முடியும். ஒன்றிணைவோம்," என்று சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

