'கட்டில்' படத்தில் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மருமகளாக கனமான பாத்திரத்தில் நடுத்துள்ளதாகச் சொல்கிறார் சிருஷ்டி டாங்கே.
இதில் கர்ப்பிணியாகவும் சில காட்சிகளில் தோன்றுவாராம். அந்தக் காட்சிகளில் நடித்தபோதுதான் இந்தியக் கலாசாரம் எவ்வளவு தனித்துவமான சிறப்பு வாய்ந்தது என்பதைத் தாம் அறிந்து கொண்டதாகச் சொல்கிறார்.
"கொரோனா பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணிகளை நாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது.
"இன்னொர் உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டாட வேண்டும்," என்கிறார் சிருஷ்டி டாங்கே.
இந்தப் படம் தமது திரைப்பயணத்தில் முக்கியமானது என்று குறிப்பிடுபவர், கூட்டுக் குடும்பங்களில் மருமகளின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படம் மிக அழகாக விவரிக்கும் என்கிறார்.
சிருஷ்டி டாங்கே நடிக்க வந்து 10 ஆண்டுகளாகிவிட்டன. எனினும் கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
"நான் முதலில் 'காதலாகி' படத்தில்தான் அறிமுகமானேன். அதன்பிறகு 'யுத்தம் செய்' படத்தில் நடித்து முடித்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் பட்டப்படிப்பை முடிக்கவேண்டி இருந்ததால் மூன்று ஆண்டுகள் சினிமாவை மறந்து படிப்பில் கவனம் செலுத்தினேன்.
"அதன்பிறகு பத்திரிகைத் துறையில் முதுகலை டிப்ளாமா படிக்க ஓராண்டு தேவைப்பட்டது. இப்படி நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகே எனக்குப் பிடித்தமான நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நின்று, நிதானமாக நடித்து வருகிறேன்," என்கிறார் சிருஷ்டி டாங்கே.
மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் தம்மை தென்னிந்தியப் பெண்ணாகவே ரசிகர்கள் கருதுவதாகச் சொல்கிறார். தமிழ் ரசிகர்களின் அன்பு தம்மை நெகிழ வைப்பதாகவும் கூறுகிறார்.
"தென்னிந்திய சினிமாவில் எனது பயணம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். எனது நலம் விரும்பும் நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் கோலிவுட்டில் நண்பர்களாக வாய்த்துள்ளனர்," என்று சொல்லும் சிருஷ்டி, 'மேகா' படத்தில் இடம்பெற்ற 'புத்தம்புது காலை' பாடல்தான் தம்மை ரசிகர்களுடன் நெருக்கமடைய வைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
படப்பிடிப்பின்போது அந்தப் பாடலை முதன்முறையாகக் கேட்ட அந்த நொடி முதலே தாம் இளையராஜாவின் தீவிர ரசிகையாகிவிட்டதாகச் சொல்கிறார்.
"இளையராஜா என்பவர் என்னைப் பொருத்தவரை ஓர் இசைக்கடவுள். ஏராளமானோர் அந்தப் பாடலை வைத்துதான் என்னை அடையாளம் காண்கிறார்கள். 'கட்டில்' படப்பிடிப்பின்போது ஒருநாள் ஒப்பனையுடன் நான் தங்கி இருந்த தங்கு விடுதிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தேன்.
"வழியில் காரை நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவியாளரிடம் விசாரணை நடத்தினார். என்னைக் கைகாட்டி, 'அவர் சினிமா நடிகை' என்று உதவியாளர் சொல்ல, 'பெயரைச் சொல்லுப்பா' என்றார் அந்த அதிகாரி.
"ஆனால் என் பெயரைச் சொன்ன பிறகும் அவருக்குத் தெரிவில்லை. உடனே என் உதவியாளர் 'புத்தம்புது காலை' பாடலின் இரண்டு வரியைப் பாடியதும், 'தம்பி அந்தக் கல்யாண மண்டபக் காட்சியில் நடனமாடும் பெண்ணை நாயகன் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுப்பாரே அந்தப் பெண்ணா' என்று ஆர்வத்துடன் கேட்டபடி மீண்டும் காருக்குள் பார்க்க, சட்டென என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'ஓ நீங்கள்தானா, வாழ்த்துகள் மேடம்' என்று சொல்லி வழியனுப்பினார்.
"இந்த மரியாதை கிடைக்க காரணம் 'மேகா' படத்தின் இயக்குநர் கார்த்தி ரிஷியும் ஒளிப்பதிவாளர் குருதேவும்.... மிக முக்கியமாக அந்த இசைக் கடவுளும்தான்," என்கிறார் சிருஷ்டி.
தம்மை மும்பைப் பெண் என்று உண்மையைச் சொன்னாலும் சென்னை மக்கள் யாரும் நம்ப மறுக்கிறார்களாம். 'நீங்கள் தமிழ்ப் பெண்தான். பொய் சொல்லாதீர்கள்' என்றுகூட சிலர் கூறுவதாக ஆச்சரியத்துடன் விவரிக்கிறார்.
"இங்கே என்னை மறக்க யாரும் விரும்பவில்லை. தங்கள் வீட்டுப் பெண்ணைப் போல் என்னை நினைக்கிறார்கள். இந்த அன்பு என்னை நெகிழ வைக்கிறது," என்கிறார் சிருஷ்டி.
, :
சிருஷ்டி டாங்கே

