மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிவிட்ட மனநிறைவு இருந்தாலும் தமிழில் சாதிக்கவேண்டும் என்று விரும்புவதாகச் சொல்கிறார் சம்யுக்தா மேனன்.
'களரி' படத்தில் நாயகன் கிருஷ்ணாவின் பாசமிகு தங்கையாக அறிமுகமானார் சம்யுக்தா. அதையடுத்து வெளியான 'ஜூலைக் காற்றில்' படத்தில் இவரது பாங்கான நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது.
பிறகு மலையாளக் கரையோரம் ஒதுங்கியவருக்கு அங்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் அமைந்தன. பிறகு கன்னட மொழியிலும் முத்திரை பதித்தவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழுக்கு வரப் போகிறாராம்.
இரண்டு முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும் விரைவில் அந்தப் படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார். தமிழிலும் சாதிப்பேன் என்று சொல்லும் சம்யுக்தா கிராமப்புறத்தில் பிறந்தவர்.
சிறுவயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகமாம். இதேபோல் ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. சினிமா மீதான ஆசையால் கிராமத்திலிருந்து ரயிலேறி நகர்ப்புறத்துக்கு வந்துள்ளார்.
"சினிமாவில் அறிமுகமானபோது ஒப்பனை, உடையலங்காரம் குறித்து எதுவும் தெரியாது. படப்பிடிப்பு துவங்கி இரண்டாவது நாளே நமது உடல் சருமம் சுற்றி கறுப்பாகிவிடும். வெளியில் நிற்கும்போதும் படப்பிடிப்பில் பயன்படுத்தும் விளக்குகளின் முன்பு நிற்கும்போதும் எதுபோன்ற முகப்பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் தெரியாது. அதன்பிறகு ஒவ்வொன்றையும் படிப்படியாகத் தெரிந்துகொண்டு இன்று ஓரளவு நிலைத்து நிற்பதாகக் கருதுகிறேன்," என்று சொல்லும் சமந்தாவுக்கு கைத்தறி ஆடைகள்தான் விருப்பமானவையாம்.
மலையாளத்தில் இவர் நடித்த 'தீவண்டி' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பிறகுதான் சம்யுக்தாவை பிற மொழிகளில் நடிக்க அழைத்துள்ளனர். சிறு வயது முதல் தன்னை அன்புடன் வளர்த்த தாத்தாதான் தனது வளர்ச்சிக்குக் காரணம் என்று நெகிழ்கிறார் சம்யுக்தா. கடைசி காலத்தில் அவரை தாம் ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டதாகவும் சொல்கிறார்.
"சிறுவயதில் எனக்கு சோறூட்டுவதில் தொடங்கி அனைத்தையும் தாத்தாதான் அன்புடன் செய்வார். அன்பைத் தவிர வேறு எதையும் அவரிடம் நான் கண்டதில்லை. ஆனால் 2018ஆம் ஆண்டு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். சிறுவயதில் அவர் என்னைக் கவனித்துக்கொண்டதுபோல் நான் அவரைக் கவனித்துக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
"அந்தச் சமயத்தில் சென்னையில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. புதுப்படத்தில் நடிப்பதற்கான நடிப்புத் தேர்வு நடப்பதாகவும் அதில் பங்கேற்க வருமாறும் அழைத்தனர். விமானம் ஏறி காலையில் சென்னைக்குச் சென்று வேலையை முடித்துவிட்டு மாலைக்குள் ஊர் திரும்பி விடலாம் என்று கணக்கிட்டுச் சென்னை சென்றேன்.
"காலையில் தாத்தாவின் உடலைச் சுடுநீரில் துடைத்துவிட்டு, உணவு தயார் செய்து வைத்து, அவரிடம் விடைபெற்றுச் சென்றேன். சென்னையில் வேலை முடிந்து கிளம்பியபோது ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைத்தது. அவரது குரல் கரகரத்தது. தாத்தாவின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமாகிவிட்டதாகச் சொன்னார்.
"மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஊர் திரும்பினேன். ஆனால், நான் சென்னையிலிருந்து கிளம்பும் முன்பே தாத்தா இறந்துவிட்டார். அம்மாதான் அதைச் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் தாத்தாவுடன் ஏதும் பேசமுடியவில்லை என்ற வருத்தம் காலத்துக்கும் என் மனதில் தேங்கி நிற்கும்," என்கிறார் சம்யுக்தா மேனன்.
தாத்தாவின் ஆசிர்வாதத்துடன் தம்மால் திரையுலகில் சாதிக்கமுடியும் என்று நம்புவதாகக் குறிப்பிடுபவருக்கு ஆன்மிக யாத்திரைகள், விடுமுறைப் பயணங்கள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகமாம்.
தமது 10 வயதில் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு சென்று வந்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது என்கிறார். அப்போது தனது பழைய கைபேசியை கொடுத்தாராம் இவரது தாத்தா.
"பயப்படாமல் சென்று வா. உன்னுடன் கைபேசி வடிவில் நான் இருப்பேன் என்று தைரியம் அளித்தார். அதன்பிறகு நிறைய பயணங்கள் சென்றிருக்கிறேன். வெளிநாடுகளுக்குச் செல்வதும் அங்கே சுற்றித் திரிவதும் எனக்குப் பிடித்தமான ஒன்று.
"பல நாடுகள் சென்று வந்த போதிலும் பிடித்த இடம் என்றால் என் தாய்நாடு இந்தியாதான். இங்குள்ள கலாசாரமும் உணவு முறையும் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகும்தான் இதற்குக் காரணம்," என்று சொல்லும் சம்யுக்தா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக எங்கும் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என வருந்துகிறார்.
ஐஸ்லாந்து செல்லவேண்டும், நல்ல மழைக்காலத்தில் சீறிப்பாய்ந்து வரும் அதிரப்பள்ளி அருவியை நேரில் ரசிக்க வேண்டும் என்பதெல்லாம் சம்யுக்தாவின் ஆசைகளில் சில.

