திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

ஆசையை வெளிப்படுத்திய சமந்தா

ஒருபக்கம் சர்ச்சைகள் நெருக்கடி கொடுத்தாலும் மற்றொரு பக்கம் தனது போக்கில் அமைதியாக செயல்பட்டு வருகிறார் சமந்தா.

தாம் நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன்-2' இணையத் தொடருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பையும் மீறி அதன் விளம்பர நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் சமந்தா.

இந்நிலையில், இணையம் வழி ரசிகர்களுடன் உரையாடிய அவரிடம் இந்தியில் எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் எனக் கேட்டனர். அதற்கு, ரன்வீர் கபூருடன் நடிக்க விரும்புவதாகவும் அவரது நடிப்பு தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பதிலளித்துள்ளார் சமந்தா.

அது காதல் படமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் இணையும் விஜய், கீர்த்தி

'தளபதி 65' படத்தை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருப்பதாகத் தகவல்.

வம்சி ஏற்கெனவே தமிழில் கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு, ராம்சரண், பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

இவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். அவர்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.

கீர்த்தி சுரேஷ் ஏற்கெனவே விஜய்யுடன் 'பைரவா', 'சர்க்கார்' ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவது உற்சாகமளிப்பதாக கூறும் கீர்த்திக்கு இந்தப் புதிய படத்தில் கனமான கதாபாத்திரம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாமதமாக நன்றி தெரிவித்த காஜல்

தனக்கு திருமண வாழ்த்து கூறிய சக நடிகைக்கு 7 மாதங்கள் கழித்து நன்றி தெரிவித்த காஜல் அகர்வாலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலின் திருமணம் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு நடிகை அனுஷ்காவால் நேரில் செல்ல முடியவில்லை. எனவே, திருமணப் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் அனுஷ்கா.

திருமணம் முடிந்த மறுநாளே வாழ்த்து தெரிவித்த அனுஷ்காவுக்கு, காஜல் நன்றி தெரிவிக்கவில்லை. சுமார் ஏழு மாதங்கள் கழித்து திடீரென அனுஷ்காவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இவ்வளவு தாமதமாகவா நன்றி தெரிவிப்பது என அனுஷ்கா ரசிகர்கள் காஜல் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் காஜலுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.