ஹாலிவுட்டில் தயாரான 'ஆர்மி ஆஃப் டெட்', இந்தியில் 'மகாராணி' இணையத் தொடர், அஜித்துடன் 'வலிமை' என்று பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஹுமா குரேஷி.
'மகாராணி' இணையத் தொடரில் ராணி பாரதி என்ற கல்வியறிவு இல்லாத இல்லத்தரசியாக நடிக்கிறார்.
கதைப்படி திடீரென அவர் பீகார் மாநில முதல்வராகிறார். கதை குறித்து கேள்விப்பட்ட பலரும் 'முதல்வர் ஹுமா' என்று கிண்டல் செய்கிறார்களாம். தமக்கும் அரசியலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவசர கதியில் மறுக்கிறார் ஹுமா.
'ஆர்மி ஆஃப் டெட்' ஹாலிவுட் படம் கடந்த 2019ஆம் ஆண்டே படமாக்கப்பட்டு விட்டதாம். கடந்தாண்டில் படத்தை வெளியிட இருந்தனர். இதேபோல் 'மகாராணி'யும் முன்பே வெளியாக இருந்த நிலையில் கொரோனா நெருக்கடி அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது. இந்நிலையில் இரண்டுமே அடுத்தடுத்த வாரங்களில் வெளியீடு காண்பது எதேச்சையான நிகழ்வு என்கிறார்.
'மகாராணி' அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும் அதுவும் பீகார் மாநிலத்துடன் சம்பந்தப்பட்டது என்பதாலும் அதில் நடிக்க சற்றே கடினமாக இருந்ததைப் போல் உணர்ந்ததாகவும் சொல்கிறார் ஹுமா.
"படப்பிடிப்புக்கு முன்பு பீகார் மாநில அரசியல் குறித்து நன்கு விவரங்களைத் தெரிந்துகொண்டேனா என்று கேட்கிறார்கள். அதற்கு அவசியம் ஏற்படவில்லை. காரணம், அரசியல் எனக்குப் புரியாது.
"நான் ஒரு நடிகை. இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்களின் பொறுப்பில் இருக்கிறேன். எனவே, என்னைத் தகுந்தபடி வழிநடத்திச் சென்றனர்.
"மகாராணி' கதைப்படி அதன் நாயகி ராணி பாரதி கல்வியறிவு இல்லாதவள். ஆனால், முட்டாள்தனமாக எதையும் செய்யமாட்டாள். பொதுவாக இந்த இரு அம்சங்களையும் நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அத்தகைய பெண்களிடம் அவர்கள் சார்ந்த மண்ணுக்கே உரிய அறிவாற்றல் நிச்சயம் இருக்கும். நுனி நாக்கு ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக அந்தப் பெண்களை நாம் கண்டுகொள்வதில்லை.
"ஆனால், ராணி பாரதி தனது அந்த அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்கிறாள். நாம் திரையில் கற்பனையாக உருவாக்கியுள்ள பீகார் மாநிலத்தில் அவள் பலவற்றைச் சாதித்துக் காட்டுகிறாள். கல்வியறிவு இல்லாத புத்திசாலி என்ற அம்சம்தான் ராணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சௌகரியமாக இருந்தது," என்கிறார் ஹுமா.
எந்தக் காலத்திலும் தாம் நேரடி அரசியலில் ஈடுபட வாய்ப்பே இல்லை என்று குறிப்பிடுபவர், தமக்கு அரசியலில் அறவே ஆர்வம் இல்லை, முதல்வராகும் ஆசை இல்லை என்பதை தைரியமாகச் சொல்ல முடியும் என்கிறார்.
தற்போது ஹாலிவுட் திரையுலகில் இந்திய நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்லும் ஹுமா, இது இந்தியத் திரையுலக வளர்ச்சிக்கும் கைகொடுக்கும் என்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கரமாக இருக்கவேண்டும் என்கிறார் ஹுமா குரேஷி.

