திரையுலகில் மொழி பேதம் என்பது அறவே கிடையாது என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
எந்த மொழியில் நல்ல படங்கள் அமைகின்றனவோ அந்த வாய்ப்புகளை தாம் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் ரகுல் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரைப் பற்றி வெளியான சில தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டம் மிகவும் கடினமானதாக இருந்ததாகச் சொல்கிறார்.
தன்னைப் பற்றிப் பலரும் அவதூறாகப் பேசினர் என்றும் அதனால் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தித் திரையுலகைச் சேர்ந்த சிலருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. சிலருக்குப் போதைப் பழக்கம் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
"இந்நிலையில் என்மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை வைத்து நிறைய பேர் அவதூறாகப் பேசினார்கள். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது குறித்து அவர்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது. மேலும் எனக்கு எதிரான ஆதாரங்களும் இல்லை. எதையும் அறிந்துகொள்ளாமலேயே என்னைப் பற்றி சிலர் கிளப்பிய வதந்திகளால் நிறைய இழப்புகளை எதிர்கொண்டேன்," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
தன் மீதான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தும் யாரும் அதை நிறுத்தவில்லை என்று குறிப்பிடுபவர், ஒரு கட்டத்தில் தமக்கும் அலுப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
"வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்கள் நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அதனால் கிசுகிசுக்களுக்கு பதிலளிப்பதை நிறுத்தி விட்டேன். அது ஓரளவு பலனளித்துள்ளது. என்னைப் பற்றிய கிசுகிசுக்கள் இப்போது குறைந்துள்ளன," என்று சொல்லும் ரகுல் பிரீத்சிங் 'இந்தியன்-2', 'அயலான்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் வழக்கம்போல் வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம்.
"ஒரு மொழியில் வாய்ப்புகள் குறையும்போது மற்றொரு மொழியில் கவனம் செலுத்துகிறேன். இந்தக் கொள்கைதான் தொடர்ந்து சினிமாவில் என்னை நிலைத்து நிற்கச் செய்கிறது," என்கிறார் ரகுல்.

