லட்சுமி: காதல் வயப்பட்டுள்ளேன்
தாம் காதல் வயப்பட்டி ருப்பதாக ரசிகர்களிடம் கூறியுள்ளார் நடிகை லட்சுமிமேனன்.
அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் கணிசமான நேரத்தைச் செலவிட்டு வருகிறார் லட்சுமி. இந்நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் அவர் இணையம் வழி கலந்துரையாடினார்.
அப்போது உங்களுக்கு எப்போது திருமணம் என்றும் யாரையேனும் காதலிக்கிறீர்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு 'நான் எப்போதுமே தனித்து இருந்ததில்லை' என்று அவர் பதிலளிக்க, அப்படியானால் யார் அந்தக் காதலர் என்று ரசிகர்கள் மற்றொரு கேள்வி எழுப்பினர். எனினும் லட்சுமி அதற்கு நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'புலிக்குத்தி பாண்டி' படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் லட்சுமி. அந்தப் படம் வசூலில் சாதித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் நல்ல வாய்ப்புக்காக அவர் காத்திருப்பதாகத் தகவல்.
கௌரி: மனம் திறந்து சொல்லுங்கள்
சென்னையில் உள்ள பள்ளியில் படித்தபோது தானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் நடிகை கௌரி கிஷன்.
தாம் படித்தபோது ஆசிரியர்கள் சிலர் மாணவிகள் குறித்து அசிங்கமாகப் பேசுவது, சாதியைக் குறிப்பிட்டு விமர்சிப்பது, உடலமைப்பைக் கிண்டல் செய்வது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது என்று மோசமாக செயல்பட்டதாகவும் பல்வேறு கொடுமைகளைத் தாம் மட்டுமல்லாமல் மற்ற மாணவிகளும் எதிர்கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் மாணவிகளுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கக்கூடும். அவ்வாறு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதை என்னிடம் தயங்காமல் தெரிவிக்கலாம். மாணவிகள் குறித்த பெயர் விவரங்கள் எதையும் வெளியிடாமல் தீர்வு காண உதவி செய்ய நான் தயார்," என்று கௌரி கிஷன் மேலும் தெரிவித்துள்ளார்.

