தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் சேதுபதி பணத்தாசையில்தான் மேலும் மேலும் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு கிளம்பியது.
அதற்கு விஜய் சேதுபதி "நான் ஒருபோதும் பணத்தின் பின்னால் ஓடியது இல்லை. என் ரசிகர்களை மகிழ்விக்கவே உழைக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.
'விக்ரம்' படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதும் முதலில் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. கை நிறைய படங்கள் இருக்கும்போது இந்தப் படத்திற்கு நாள் ஒதுக்க முடியுமா என்று யோசித்தார். பின்னர் உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுக்க முடியாமல் ஒத்துக்கொண்டார்.
இதுபோதாது என்று 'சன்' தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'மாஸ்டர் ஷெஃப்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க பலரும் அணுகுவதால் இவர் பணத்தின் மேல் ஆசை கொண்டு இப்படித் தொடர்ந்து நடிக்கிறார் என்று இவரின் உயர்வைக் கண்டு பொறாமைப்படுபவர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இவருடைய குருவான எஸ்.பி.ஜனநாதன் அண்மையில் காலமானார். அதனால் மனமுடைந்து போனார் விஜய் சேதுபதி.
சில நாட்களாக மன அமைதி இல்லாமல் படங்களில் நடித்து வந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் விஜய் சேதுபதி தாடி, மீசையுடன் அமைதி வேண்டி புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் ஆசிரமத்திற்குச் சென்றார்.
அங்கு அவர் நிம்மதியாக தோட்டங்களில் சுற்றித் திரிந்து, அங்கிருக்கும் மாமரங்களில் இருந்து மாங்காய் பறிப்பது போன்ற காணொளிகள் வெளியாகி உள்ளன. அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

