தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய இருவருடனும் போட்டி போட்டு நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை மீனா.
மேலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்றி இருவரையும் மிரட்ட விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முன்னணி நாயகியாக வலம்வந்தார் மீனா. இப்போது அவரது மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு 'அண்ணாத்த' படம் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என தாம் எதிர்பார்க்கவே இல்லை," என்று குறிப்பிடுபவர், உச்ச நடிகர் என்றபோதும் ரஜினி இன்று வரை எளிமையான மனிதராக வலம் வருவது தம்மை ஆச்சரியப்படுத்துவதாகச் சொல்கிறார்.
"அண்மையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது திடீரென நான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து பேசினார். 'மீனா நீங்கள் இப்படிச் செய்வது உண்மையாகவே வருத்தம் அளிக்கிறது' என்று அவர் சொன்னதும் உண்மையாகவே பதறிப்போனேன். 'என்னாச்சு சார்' என்று நான் கேட்க, 'எல்லோருமே மாறிவிட்டனர். நீங்கள் மட்டும் எப்படி 'வீரா' படத்தில் பார்த்தது போன்றே இருக்கிறீர்கள்' என்று சிரித்தபடி கூற, படப்பிடிப்பில் இருந்த அனைவருமே சிரித்து விட்டனர்," என்று சொல்லும் மீனா, தனது மகளும் நடிப்பில் திறமைசாலியாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்கிறார்.
ரஜினி, கமல், மோகன்லால், அஜித் என்று பல கதாநாயகர்களுடன் நடித்துள்ள போதிலும் விஜய்யுடன் மட்டும் நாயகியாக இணைந்து நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறதாம்.
"அந்தச் சமயத்தில் இருவருமே பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தோம். 'ஃப்ரெண்ட்ஸ்' உட்பட மூன்று படங்களில் நானும் விஜய்யும் இணைந்து நடிப்பதாக இருந்தது.
"அவர் நடித்த 'ஷாஜகான்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினேன். படப்பிடிப்பின்போது ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக்கொண்டதோடு சரி. அவரைப் போலவே நானும் அமைதியானவள். அதனால் அதிகம் பேசவில்லை. எனினும் ஒரு பாடலுக்காவது இணைந்து நடித்த மனநிறைவு உள்ளது," என்று பழைய சம்பவங்களை அசைபோடுகிறார் மீனா.
தாம் உச்ச நடிகையாக இருந்தபோது மற்ற கதாநாயகிகளான ரோஜா, நக்மா, ரம்பா, சௌந்தர்யா உள்ளிட்டவர்களை உன்னிப்பாக கவனிப்பாராம்.
அந்த நடிகைகள் ஒரு படத்தில் ஒப்பந்தமானதாக கேள்விப்பட்டால் உடனே என்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், எப்படி அந்த வாய்ப்புக் கிடைத்தது, படம் வெளியான பின் கிடைத்த வரவேற்பு என்று அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வாராம்.
"எனக்கும் அப்படிப்பட்ட நல்ல கதாபாத்திரங்கள் அமையவேண்டும் என விரும்பி இருக்கிறேன். திறமையை வெளிப்படுத்துவதில் பெரிய போட்டி நிலவியதே தவிர, எங்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதில்லை. ரோஜாவும் நானும் நல்ல தோழிகளாகப் பழகினோம்," என்கிறார் மீனா.
மணிரத்னம், சங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்பவர், 'திருடா திருடா' படத்தில் நடிக்க மணிரத்னத்திடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
"அது மட்டுமல்ல, சங்கர் சார் தன்னுடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தபோது கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை.
அடிப்படையில் நான் பரதநாட்டியக் கலைஞர். ஆனால் நடனத்தை அடிப்படையாக வைத்து இதுவரை எந்த கதாபாத்திரமும் அமையவில்லை. அதேபோல் கல்லூரி மாணவியாக நடிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இனி அது நிறைவேறாது. எனினும் தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் நிலைத்து நிற்பதே பெருமைதான்," என்கிறார் மீனா.