கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பவர்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் வகையில் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கி உள்ளார் இளம் நாயகி நிதி அகர்வால்.
இதன் மூலம் தன்னால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது இந்த நல்ல முயற்சியில் பல தன்னார்வலர்களும் சமூக சேவையாற்றும் அமைப்புகளும் இணைந்திருப்பதால் கூடுதல் பலம் கிடைத்திருப்பதாக உணர்கிறாராம்.
"கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை ஆபத்தானது. பல வகையிலும் மனிதவாழ்க்கையில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகே அதன் தீவிரம் எனக்குப் புரிந்தது.
"கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எனக்குத் தெரிந்த பலர் கிருமித்தொற்றால் முடங்கிப் போயினர். யாரையும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளவோ, உதவி செய்யவோ இயலவில்லை. அதனால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டது.
"மருத்துவமனையில் படுக்கைகளுக்காகவும் உயிர்வாயு, மருந்துகளுக்காகவும் பலரைத் தொடர்புகொள்ள வேண்டி இருந்தது.
"இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகளைக் காண்கிறேன். அவற்றுள் எவை நம்பகமானவை என்பது தெரியவில்லை. ஓரளவு வசதி படைத்த நமக்கே மிகக் கடினமான சூழலாக இருக்கும்போது அன்றாட உணவுக்கே அல்லாடும் ஏழை மக்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கெல்லாம் நாம்தானே உதவவேண்டும்," என்று கேட்கிறார் நிதி அகர்வால்.
எனினும் இந்தக் கேள்வியோடு நிறுத்திக்கொள்ளாமல் இணையதளம் தொடங்கும் வரை அவர் சென்றதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஹைதராபாத்தில் தனக்கென இரு குழுக்களை அமைத்துள்ளார் நிதி. காரணம், தமிழிலும் தெலுங்கிலும்தான் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் இரு நகரங்களிலும் தமக்குத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்.
"எதற்காக இணையதளம் தொடங்கவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அனைத்தையும் அதில் தீவிரமாகச் செயல்படும் அனைவரையும் நம்பிவிட இயலாது.
"இணையதளம் என்று வரும்போது அதன்மூலம் நம்மைத் தொடர்பு கொள்பவர் பல விவரங்களைத் தெரிவிக்க வேண்டி இருக்கும். ஒருவர் மீது அதிக நம்பகத்தன்மை ஏற்படும். தவிர, பல விஷயங்களைச் சரியாகத் திட்டமிடவும் இணையதளம் உதவிகரமாக இருக்கும்," என்கிறார் நிதி.
பல இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இவருடன் இணைந்துள்ளனர். சமூக சேவையாற்றும் அமைப்புகளும் இணைந்தபிறகு நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு உதவ முடிகிறதாம்.
"தற்போது எனது சக்திக்கு உட்பட்ட அளவில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவி வருகிறேன். சேவை மனப்பான்மை உள்ள யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம்.
"மிக விரைவில் நாடு முழுவதும் உயிர்வாயு, மருந்துகளை தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
"'கொவிட் -19' தாக்கம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். ஆனால், அதன் பிறகும் எங்களுடைய இணையதளமும் சேவைகளும் தொடரும். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது," என்கிறார் நிதி அகர்வால்.
இளையர்களும் வசதி படைத்தவர்களும் தங்களால் இயன்ற சேவையை ஆற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஊரடங்குக்குப் பிறகுதான் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என்பதால் ஓய்வு நேரத்தில் இவ்வாறு சேவையாற்றுவதைத் தவிர சமையலிலும் திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொழுதைப் போக்குகிறாராம்.
தற்போது தமிழில் உதயநிதியுடனும் தெலுங்கில் பவன் கல்யாணுடனும் இரண்டு படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால், தமிழில் சரளமாகப் பேசவும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
"தினமும் நடனத்துக்கென கணிசமான நேரத்தை ஒதுக்குகிறேன். நடனம் எனக்குப் பிடித்தமான விஷயம்.
"அதன்மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. இதனால் எதிலும் திட்டமிட்டும் கச்சிதமாகவும் செயல்பட முடிகிறது. விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்புகிறேன். பொதுமக்கள் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றிபெற உதவ வேண்டும்," என்கிறார் நிதி அகர்வால்.

