'நீங்களும் நாயகன், நாயகி ஆகலாம்'
சினிமாவில் வரும் கதாநாயகன், நாயகியைப் போல் நாமும் இருக்கவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள கொரோனா கிருமி நல்ல வாய்ப்பு தந்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை வரலட்சுமி.
ஊரடங்கின்போது தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லாத அனைவருமே கதாநாயகர்கள்தான் என்று அவர் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"எதிரிகளை வீழ்த்துவது, நடனமாடுவது, ஏழைகளுக்கு உதவுவது என்று ஒரு கதாநாயகனுக்கு உரிய எதையும் நாம் செய்யத் தேவை இல்லை. ஊரடங்கின்போது வெளியே செல்லாமல் இருந்தாலே நம்மால் கொரோனா கிருமியை வென்றுவிட முடியும்.
"அந்த எதிரியை வெல்லக் காரணமாக இருக்கும் நாம் கதாநாயகன், நாயகி ஆகிவிடலாம். வீட்டில் இருக்கும்போதுகூட முகக்கவசம் அணிவது நல்லது. மேலும் தினமும் நல்ல புத்தகங்களைப் படிக்கப் பாருங்கள்," என்று காணொளிப் பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் வரலட்சுமி.
கணவர் குறித்த எதிர்பார்ப்புகள்
தமக்குத் திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைப் பார்த்து நீண்டநேரம் சிரித்ததாகச் சொல்கிறார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில் அண்மைய இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் தமது வருங்காலக் கணவர் குறித்த எதிர்பார்ப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கானவர் தாம் அன்றாடம் செய்யக்கூடிய சிறுசிறு விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவரிடம் நான் பணம் வசதிகள் என எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவரது பெரும்பகுதி நேரத்தை என்னுடன் செலவிட வேண்டும் என விரும்புகிறேன்.
"எப்போதுமே அன்புடனும் காதலுடனும் இருக்கவேண்டும். அவ்வப்போது நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும். அனைத்தையும்விட முக்கியமாக பொருட்கள் வாங்க வெளியே வரும்போது அவரும் உடன்வர வேண்டும். ஏனெனில் இதற்குத்தான் நான் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்," என்று சொல்லும் யாஷிகா, தற்போது 'இவன்தான் உத்தமன்', 'ராஜபீமா', 'கடமையைச் செய்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
'அந்த நாள்கள் மறக்க முடியாதவை'
நடிகை மாளவிகா தமது சிறு வயது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவற்றைப் பார்த்து ஏராளமான ரசிகர்கள், அவர் சிறு வயதிலும் அழகாக இருப்பதாக பின்னூட்டமிட்டுள்ளனர்.
"ஒரு மாறுவேடப் போட்டிக்காக என் தாயார் என்னை தயார்படுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. போட்டியில் நான் ஒரு மலரைப் போல் நான் பேச வேண்டும். அதற்கேற்ப என்னை தயார்ப்படுத்தி இருந்தார் அம்மா. அந்த நாள்கள் மறக்க முடியாதவை," என்று மாளவிகா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் மாளவிகா.

