உலகத்தையே உலுக்கிவரும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க நான்கு வழி
களைக் கண்டிப்பாக பின்பற்றுங்கள் என்று சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப் பிரபலங்கள் சொன்னால் மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்
தமிழக அரசு நடிகர்களை வைத்து கொரோனா விழிப்புணர்வு காணொளிகளை எடுத்து வெளியிட்டு வருகிறது.
அந்தக் காணொளிகளில் சிவகார்த்தி
கேயன், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஒருபடி மேலாக கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதனை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் வீட்டில் பத்திரமாக இருங்கள், மிக மிக முக்கியமான வேலையாக இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள், முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.
"என் ரசிகர்கள், என் தம்பிகள், தங்கச்சிகள் அனைவருக்கும் வணக்கம். உங்களிடம் தனித்தனியாக பேச முடியவில்லை. அதனால்தான் இவ்வாறு பேசி எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வருகிறேன். அனை
வரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
"தயவுசெய்து மிக மிக அவசியம் என்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள். எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருங்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் குடும்ப உறுப்
பினர்கூட பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதனால் இந்த அலை ஓயும் வரையாவது வெளியிலும் வீட்டிலும் பாதுகாப்பான முகக்கவசங்களை அணியுங்கள்.
"நிறைய பேர் முகக்கவசம் போட்டதால் கொரோனாவில் இருந்து தப்பியதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
"அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் கேட்டு, தெளிவுபடுத்திக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
"நானும் இரண்டு முறை தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுங்கள். முக்கியமாக அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களை எங்கும் வெளியே செல்லவிடாதீர்கள்.
"கண்டிப்பாக ஏதாவது முக்கியமான வேலைகள் இருக்கும். அதுக்கு மட்டும் டக்குனு போயிட்டு டக்குனு வீட்டுக்குள் வந்துவிடச் சொல்லுங்கள்.
"முன்னெச்சரிக்கையாக இருந்தால் இந்த நிலையைக் கட்டாயம் மாற்றலாம். அதன் பின்னர் அவரவர் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடலாம். விரைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம். அந்த நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள். பத்திரமாக இருங்கள்.
"வீட்டில் அனைவரையும் மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள். முக்கியமாக உங்கள் உடம்பைப் பார்த்துக்கொண்டு குடும்ப உறுப்
பினர்களையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
"எல்லா வயதினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும். வீட்டிலேயே இருந்துவிட்டால் இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
"விரைவில் அனைத்தும் சரியாகி
விடும். விரைவாக படத்தின் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன். நான் பத்திரமாக இருக்கிறேன். வீட்டில் அனை
வரும் நன்றாக இருக்கிறார்கள்.
"உங்களின் அன்பு, ஆதரவு எல்லாமே கிடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு பெரிய நன்றி," என்று பேசியுள்ளார். இது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதோடு வளர்ந்து வரும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு படத்தை இயக்கவும் நடிக்கவும் வாய்ப்புகளை வழங்கி படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளிவந்த 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படங்கள் நல்ல வசூலைத் தந்தன. அதுபோல் தற்பொழுது தன்னுடைய மூன்றாவது தயாரிப்பான 'வாழ்' படத்தைக் கொரோனா தாக்கத்தால் 'ஓடிடி'யில் வெளியிட இருக்கிறார்.
இப்படத்தை 'அருவி' பட இயக்குநர் அருண்பிரபு இயக்கி உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
'வாழ்' படத்தின் 'ஓடிடி' உரிமையை 'சோனி லிவ்' நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

