உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காடு, மலைகளில் சுற்றித்திரிந்து அங்கு எடுத்த பல படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா மோகனன். அத்துடன் நடிகர் விஜய் நண்பர்களுக்காக வாழ்பவர் என்று குறிப்பிட்டு அவருடன் தனக்கிருக்கும் நட்பைப் பற்றி விளக்கி
யிருக்கிறார். மேலும் ஊரடங்கின்போது சமையல் கற்றுக் கொண்டதாகவும் பதிவிட்டு இருக்கிறார் மாளவிகா.
மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலே' மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கன்னடம், இந்தி என அடுத்தடுத்து அறிமுகத்தை கொடுத்து பிரபலமாகி வந்த மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்டை' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் இவர் கொஞ்ச நேரமே வந்தாலும் மிக முக்கியமான வேடமாக இருந்தது. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க காத்திருந்தார்.
அந்த சமயத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.
அதிர்ஷ்டக் காற்று மாளவிகா மீது வீசியது. விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் ஒப்பந்தமாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
விஜய், மாளவிகா மோகனன் முதல்முறையாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளைச் செய்தது. அதனைத்தொடர்ந்து பல மொழிகளிலிருந்தும் மாளவிகாவுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. இவர் பொறுமையாக கதையைக் கேட்டு, நல்ல திறமையான இயக்குநர்களின் படங்களில் நடிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளைத் தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களைக் கவரும் வண்ணம் காடு, மலை போன்ற பகுதிகளுக்குச் சென்று வந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா. அத்துடன் அவர் நடிகர் விஜய் பற்றி மிகவும் பெருமையாக பதிவிட்டு இருக்கிறார்.
"விஜய் நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர். அவரது நட்பின் அளவை விவரிக்கவே முடியாது. எந்த நேரத்திலும் அவருடன் தொடர்பு கொள்ளலாம். உடனே அவர் பேசுவார். உதவி வேண்டுமென்றாலும் உடனே செய்வார். என்னிடம்
மட்டுமல்ல, அவரது மற்ற நண்பர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார்.
"என்னுடைய சில நண்பர்கள் வேலை இல்லையென்றாலும் வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். ஆனால் விஜய் எவ்வளவு வேலை இருந்தாலும் நம்முடன் பேசுவார்.
"நான், விஜய், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி மூவரும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறோம். நாங்கள் அதன்
மூலம் அடிக்கடி பேசிக்கொள்வோம். அப்போது எல்லாம் விஜய் வாயிலிருந்து தவறாக, எதிர்மறையாக ஒரு வார்த்தைகூட வந்தது இல்லை. எப்போதுமே அவ்வளவு உற்சாகமாக, நேர்
மறையான சிந்தனையுடன் இருப்பார். மிகவும் இனிமையான நபர்.
"படப்பிடிப்புக்குத் தயாரான பிறகு அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு ரத்தானால் நாங்கள் புலம்புவோம். இதற்காகவா இவ்வளவு சீக்கிரம் எழுந்தோம் என்றெல்லாம் பேசுவோம். ஆனால் அதைக்கூட விஜய் எளிதாகவே எடுத்துக்கொள்வார். பரவாயில்லை. இப்படி நடப்பது சகஜம்தான் என்று கூறி எங்களை ஆறுதல்பட வைத்து, அவரும் சகஜமாக எடுத்துக்கொள்வார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்," என்று கூறினார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளியிலும் செல்ல முடியவில்லை. மேலும் படப்பிடிப்புகளும்
இல்லாததால் வீட்டில் இருந்தபடி சமையல் கற்றுக்கொள்ள தொடங்கி அவற்றைக் காணொளியாக எடுத்து மாளவிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது நடிப்பால் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தனுஷ், இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து 'D43' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் முடிவடைந்துள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது படக்குழு.

