நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பாடல் ஒன்று நேற்று முன்தினம் வெளியானது. அந்தப் பாடல் பல லட்சம் உயிர்களைக் கொன்று குவிக்கும் கொரோனாவும் 'நம்மை விட்டுக் கடந்து போகும்' என்ற நம்பிக்கையை
வலியுறுத்துவதாக நினைத்து ரசிகர்கள் பாடலை வரவேற்றிருக்கிறார்கள்.
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்
உருவாகி உள்ள படம் 'நெற்றிக்கண்'. பார்வையற்ற பெண்ணாக இந்தப்
படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் கார்த்திக் நேத்தா வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகி உள்ளது 'இதுவும் கடந்து போகும்' பாடல்.
பாடலின் ஒவ்வொரு வரியும் வாழ்க்கையின் வலிகளையும் வாழ்க்கைக்குத் தேவையான ஏகப்பட்ட தகவல்களையும் அடுக்கி வைத்திருக்கும் பெட்டகமாக உள்ளது. பாடலைக் கேட்ட மாத்திரத்தில் ரசிகர்களை அடிமையாக்கிவிடுகிறது.
கொரோனா மட்டுமின்றி வாழ்வின் பல சிக்கலான தருணங்களில்
இருந்தும் நம்மைக் காக்கும் அருமருந்தாக இந்தப் பாடலில் உள்ள அனைத்து வரிகளும் இடம்பெற்றுள்ளன.
'உடனே வலிகள் மறைந்து போகாதே. சில நாள் வரைக்கும் அதைச்
சீண்டாதே. அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே' என்ற வரிகள் மனமுறிவு பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி தற்கொலை உள்ளிட்ட அனைத்து மோசமான பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் வரிகளாக இந்தப் பாடலில் இடம்
பெற்றுள்ளன.
மேலும், இந்தப் பாடலைக் கேட்டால் கொரோனாவும் நம்மை விட்டு சீக்கிரமே கடந்து போகும் என்கிற நம்பிக்கையைத் தருவதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

